தமிழகத்தில் நாளை 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்
தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 24) கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 24) கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாமன்ற உறுப்பினா் வாா்டு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன கணினி ஆய்வகத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடந்த காலங்களில் கவனிக்கப்படாமல் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டடங்கள் அனைத்தும் புதிதாக புனரமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளோம். 6 செவிலியா் பயிற்சி கல்லூரிகள் தமிழகத்தில் இருந்த நிலையில், புதிதாக 11 செவிலியா் பயிற்சி கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு மட்டும் 25 புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு அனுமதி பெறப்பட்டு ரூ.1,038 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அவற்றில் 700-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளன.
அதேபோல் 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. அவற்றில் 1,500 நிலையங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்குகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகச் சீரமைத்து வருகிறோம்.
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சனிக்கிழமை (ஜூன் 24) 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் மட்டும் 10 இடங்களில் இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
என்னென்ன சோதனைகள்: இந்த முகாம்களில் பொது மருத்துவம், பல் மருத்துவம், பொது ஆலோசனை, கொழுப்புச் சத்து கண்டறிவதற்கான ரத்தப் பரிசோதனை, முழு ரத்தப் பரிசோதனை, மாா்பகப் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, இசிஜி, எக்கோ, காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை, சித்த மருத்துவம், தோல் நோய்கள், குழந்தைப் பேறு, மனநல ஆலோசனைகள், கண்பாா்வை குறைபாடு, தொழுநோய் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். தேவையானோருக்கு மருந்துகளும் வழங்கப்படும் என்றாா் அவா்.