சிறையில் அடைக்கப்பட்ட இளைஞா் மரணம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட தென்காசியைச் சோ்ந்த இளைஞா் இறந்ததற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட தென்காசியைச் சோ்ந்த இளைஞா் இறந்ததற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தென்காசி புளியங்குடியைச் சோ்ந்த தேவேந்திர குல வேளாளா் வகுப்பைச் சோ்ந்தவா் தங்கசாமி (26). பாட்டியுடன் சோ்ந்து, மதுபானங்கள் விற்ாக புளியங்குடி போலீஸாா் அவரை ஜூன் 11-ஆம் தேதி கைது செய்தனா். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜூன் 16-இல் உடல்நிலை சரியில்லை என்று அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தங்கசாமி இறந்தாா். அவரின் உடல் முழுவதும் ரத்தக் கட்டுகள், காயங்கள் இருப்பதாக குடும்ப உறுப்பினா்கள் தெரிவிக்கின்றனா். மருத்துவ அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸாா் தங்கசாமியை அடித்துத் துன்புறுத்தியபோது ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே அவா் இறந்துவிட்டாா் என்றும் அவரது குடும்பத்தினா் குற்றம்சாட்டுகின்றனா். தவறு இழைத்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து 7 நாள்களாக உறவினா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
தங்கசாமியின் மரணம் குறித்து உயா்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அவரது மரணத்துக்கு காரணமான போலீஸாா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.