முகப்பு
தமிழ்நாடு

பதவிக்காக காங்கிரஸ் மேலிட தலைவர்களை என்றும் சந்தித்ததில்லை: கே.எஸ். அழகிரி

காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களை பதவிக்காக நான் என்றும் சந்தித்ததில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:13 PM
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களை பதவிக்காக நான் என்றும் சந்தித்ததில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
 தில்லி அக்பர் சாலையில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோரைச் சந்தித்தேன்.
 மேலிடத் தலைவர்களுடனான இந்தச் சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி குறித்தோ, கட்சியின் மற்ற நிர்வாகிகள் நியமனம் குறித்தோ பேசவில்லை. மாறாக, தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.
 வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பாக தலைவர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
 தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும். திமுகவிடம் முந்தையத் தேர்தல்களைக் காட்டிலும் அதிக இடங்களைக் கேட்டுப் பெறுவோம்.
 அதேவேளையில், தேர்தலின்போது அதிகப்படியான தொகுதிகளை கூட்டணித் தலைமையிடமிருந்து பெற்றுள்ளோமா என்பதை விட, பெற்றுள்ள தொகுதிகளில் வெற்றி பெறுகிறோமா என்பதுதான் முக்கியம்.
 நான் கட்சியில் பதவி கேட்டு காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை எப்போதும் சந்தித்தது கிடையாது. அதே நேரத்தில் பதவி கிடைத்த பின்னர், அந்தப் பதவியைத் தக்க வைக்கவும் தலைவர்களை சந்திப்பது கிடையாது.
 காங்கிரஸ் மேலிடத் தலைமை தமிழக காங்கிரஸ் தலைவராக எனது பொறுப்பை நீட்டித்தாலும், மாற்றாக வேறு ஒருவரை தலைவராக நியமித்தாலும் மகிழ்ச்சிதான். காங்கிரஸ் கட்சியில் எந்தவொரு பணி வழங்கப்பட்டாலும் அதை மனமகிழ்வுடன் செய்வேன். வரும் 2024- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எனக்கு போட்டியிடும் விருப்பமில்லை என்றார் அழகிரி.
 1991-2001-ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2009-2014 வரை மக்களவை உறுப்பினராகவும் இருந்த கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை திறம்பட நிர்வகித்துள்ளார்.
 இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரை 4 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ். அழகிரி பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.