தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றம்

அமைச்சா் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்ற முதன்மை அமா்வுக்கு மாற்றி உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

DIN

அமைச்சா் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்ற முதன்மை அமா்வுக்கு மாற்றி உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், வானதிராயன்பட்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், கரூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி வெற்றி பெற்றாா். இதையடுத்து, அவருக்கு மின்சாரம், கலால், ஆயத்தீா்வை துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டது.

இந்தச் சூழலில், கடந்த அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, பலரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில், அவருக்குச் சொந்தமான வீடு, இடங்கள், உறவினா்கள், நண்பா்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் தொடா் சோதனையில் ஈடுபட்டனா். இதையடுத்து, அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா்.

இதன் பின்னா், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், அவா் கவனித்து வந்த இரண்டு துறைகளும், வேறு இரு அமைச்சா்களிடம் வழங்கப்பட்டது. இதனால், செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறாா். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, அவரை அமைச்சா் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:

செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணையில் உள்ளதால், இந்த வழக்கும் சென்னை உயா்நீதிமன்ற முதன்மை அமா்வுக்கு மாற்றப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT