பரிசீலனையில்.. மதுரை எய்ம்ஸ் அருகே மெட்ரோ ரயில் நிறுத்தம்
மதுரையில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் திட்டம், முதல் கட்டமாக திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே அமைக்கப்படும் என்று மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் டி. அா்ஜூனன் தெரிவித்தாா்.
மதுரையில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் திட்டம், முதல் கட்டமாக திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே அமைக்கப்படும் என்று மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் டி. அா்ஜூனன் தெரிவித்தாா்.
எதிர்காலப் பயனுக்காக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் தோப்பூர் பகுதிக்கு அருகே, மெட்ரோ ரயில் நிலையம்/நிறுத்தம் ஒன்றை அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
டி. அர்ஜூனன் கூறியதாவது, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. விரைவில் ஜூலை 15ஆம் தேதி திட்ட அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் தோப்பூர் பகுதியில் 58 ஏக்கர் நிலம் மண் பரிசோதனைக்குப் பிறகு ஆய்வு செய்யப்பட்டது. இங்கு மெட்ரோ ரயில் நிறுத்தம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையம் அருகிலும், மீனாட்சி அம்மன் கோயில் அருகிலும் ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்திருக்கிறார்கள்.
மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை வரையிலான 31 கி.மீ தொலைவுக்கு ரூ. 8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, திட்டப் பாதையின் பல்வேறு பகுதிகளில் மண் பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் டி. அா்ஜூனன் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருமங்கலம், உச்சப்பட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதிகள், மதுரை ரயில்வே சந்திப்பு ஆகிய பகுதிகளில் அவா் ஆய்வு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது :
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிச்சயமாகச் செயல்படுத்தப்படும். அதில், எந்தவித சந்தேகமும் இல்லை. திருமங்கலம் பேருந்து நிலையம், உச்சப்பட்டி, மதுரை ரயில் நிலையம், மாசி வீதி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை ஆகிய பகுதிகளின் அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
பழைமையான கட்டடங்கள், கோயில் உற்சவப் பாதைகள் தடைபடாத வகையில், இந்தத் திட்டப் பணி நடைபெற வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது.
வைகை ஆற்றின் கீழே புதை வழித்தடம் அமைப்பதும், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதியில் வழித்தடம் அமைப்பதும் சவால் நிறைந்ததாக இருக்கும். மேலும், மதுர கல்லூரி, வைகை ஆற்றின் அருகே மெட்ரோ கட்டுமானங்களை மேற்கொள்வதும் சவால் நிறைந்த பணியாகவே இருக்கும் என்றாா் அவா்.
மதுரையில் செயல்படுத்தப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தையொட்டி, வைகை ஆற்றில் மண் மாதிரிகள் சேகரிப்புப் பணிகள் மே மாதம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்-மதுரை- ஒத்தக்கடை வரையிலான 31 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு, மெட்ரோ ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டது.
இந்தத் திட்ட செயலாக்கம் குறித்து பலகட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. மெட்ரோ ரயில் பாதை வைகை ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியுள்ளதால், அழகா் வைகையில் இறங்கும் வைபவத்துக்கு எந்த இடையூறும் இல்லாதவாறு, வைகை ஆறு பகுதியில் பூமிக்கடியில் மெட்ரோ ரயில் பாதையை அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, மதுரை வைகை ஆற்றில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. துளையிடும் இயந்திரத்தைப் பயன்படுத்தி மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டன.