மக்களுக்காக கவலைப்படும் தலைவராக இருப்பேன்: மு.க. ஸ்டாலின்
மக்களுக்காக கவலைப்படும் தலைவராக என்றும் இருப்பேன் என பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
மக்களுக்காக கவலைப்படும் தலைவராக என்றும் இருப்பேன் என பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து பேசினர்.
அதனைத் தொடர்ந்து ஏற்புரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி மக்கள் மனதில் நிறைந்து வாழ்கிறார். மிகுந்த மகிழ்ச்சியோடு உங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன். அறிஞர் அண்ணாவைப்போல பேசத்தெரியாது. கருணாநிதி போல் எழுதத்தெரியாது. ஆனால், அவர்களைப்போல் உழைக்கத் தெரியும்.
14 வயதில் திமுகவில் மக்கள் பணியாற்றத் தொடங்கினேன். நாடக மேடைகளில் கட்சியின் வெற்றிக்காக உழைத்தேன். அவசர நிலை காலத்தில் சிறைக்கைதியாக அவதிக்குள்ளாக்கப்பட்டேன். திருமணமான ஐந்தே மாதத்தில் சிறைக்குச் சென்றேன்.
55 ஆண்டுகாலத்தில் எனது கால் படாத கிராமங்கள் இல்லை. இரவு பகலாய் சாலைகள் இல்லாத காட்டிலும் கருப்பு சிவப்பு கொடியை ஏற்றிவைத்தேன். அப்படி உழைத்த எனக்கு 70 வயதாகிவிட்டது என்பதை என்னாலே நம்ப முடியவில்லை. நினைத்துப்பார்த்தால் எல்லாம் நேற்று நடந்ததுபோல் உள்ளது. என் பயணம் நெடிய பயணம்.
மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு முதல்வனாய் இருப்பேன்.
வயது என்பது மனதைப் பொறுத்தது. இளமை என்பது முகத்தில் இல்லை. மனதில்தான் இருக்கிறது. லட்சியவாதிகளுக்கு என்றும் வயதாவதில்லை. என்னுடன் கட்சித் தொண்டர்கள் பயணிப்பதால், நாளுக்குநாள் நான் இளமையாகிவிடுகிறேன்.
என்னுடைய 70வது பிறந்தநாளில் உங்கள் முன்பு நான் உறுதிமொழி எடுக்கிறேன். அண்ணா உருவாக்கிய கட்சியை, கருணாநிதி கட்டிக்காத்த கட்சியை என்றும் நிரந்தரமாக ஆட்சிப்பொறுப்பில் வைத்திருப்பேன்.
கல்வி, பொருளாதாரத்தில் உயர்ந்துகாட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இதற்காக திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்க வேண்டும். கொள்கையை பரப்ப கட்சி. கொள்கையை நிறைவேற்ற ஆட்சி. தமிழகத்தை தலை நிமிர வைப்போம்.
தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் வழங்கினோம். 80 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ளவை விரைவில் நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிட்டார்.