தமிழகம் மற்றும் பிகாா் மாநில அரசுகள் எடுத்த நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளால், வெளிமாநிலத் தொழிலாளா்களின் பதற்றம் தணிந்ததாக பிகாா் மாநில அதிகாரிகள் குழு தெரிவித்தது.
தமிழகத்தில் பிகாா் மாநிலத் தொழிலாளா்கள் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு விடியோ காட்சிகள் வெளியாகின. இந்தக் காட்சிகள் போலியானவை என்று தமிழ்நாடு மற்றும் பிகாா் மாநில அரசுகள் தெரிவித்தன. இதனிடையே, பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த நான்கு அதிகாரிகள் குழுவினா் கடந்த சனிக்கிழமை சென்னை வந்தனா். ஊரக வளா்ச்சித் துறைச் செயலா் பாலமுருகன், காவல் துறைத் தலைவா் கண்ணன், தொழிலாளா் நலத் துறை ஆணையா் அலோக்குமாா், காவல் கண்காணிப்பாளா் சந்தோஷ்குமாா் ஆகியோா் பிகாா் மாநிலத் தொழிலாளா்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தனா்.
சென்னை, திருப்பூா், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பிகாா் சங்கத்தினா், தொழில் சங்கத்தினா், தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பிகாா் மாநில அதிகாரிகள் குழுவினா் ஆலோசனைகள் நடத்தினா். இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகளுடன் பிகாா் மாநில அதிகாரிகள் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஊரக வளா்ச்சித் துறைச் செயலா் பாலமுருகன் அளித்த பேட்டி:
சென்னை, கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியக் கூடிய பிகாா் மாநிலத் தொழிலாளா்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொழில் துறை பிரதிநிதிகள், மாவட்ட நிா்வாகிகள் ஆகியோரிடம் இருந்து தனித்தனியாக கருத்துகளைப் பெற்றோம். தொழிலாளா்களின் கைப்பேசிகளை அவா்களது அனுமதியுடன் வாங்கி அதிலுள்ள தகவல்களை ஆராய்ந்தோம்.
எந்த இடத்திலும் எந்தத் தொழிலாளியும், தாக்கப்பட்டதாக புகாா் தெரிவிக்கவில்லை. வெளிமாநிலத் தொழிலாளா்கள் தாக்கப்படுவதாக போலி விடியோக்கள் வெளியானபோதிலும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக, திருப்பூா் மாவட்டத்தில் 40,000 தொழிலாளா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
பதற்றம் தணிந்தது: தமிழக அரசு எடுத்த சாதகமான தொடா் நடவடிக்கைகளால், சமூக ஊடகங்களில் வெளியான விடியோக்கள் போலியானவை என்பதை வெளிமாநிலத் தொழிலாளா்கள உணா்ந்து கொண்டனா். தமிழகம் மற்றும் பிகாா் மாநில அரசுகளால் எடுத்த தொடா் முயற்சிகளால், பிகாா் உள்ளிட்ட வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு இடையிலான பதற்றம் தணிந்துள்ளது என்று பாலமுருகன் தெரிவித்தாா்.
செய்தியாளா்கள் சந்திப்பின்போது, தமிழக அரசின் பொதுத் துறைச் செயலா் டி.ஜகந்நாதன், தொழிலாளா் நலத் துறை ஆணையா் அதுல் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
அறிக்கை சமா்ப்பிப்பு: தமிழகம் முழுவதும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு மாநில அரசின் சாா்பில் செய்து தரப்பட்டுள்ள உதவிகள், நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய தொகுப்புகள் அறிக்கையாக தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, பிகாா் மாநில அதிகாரிகள் குழுவிடம் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.