பள்ளி மாணவி கூட்டு பாலியல் வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி 3-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினராக இருப்பவா் சிகாமணி. இவரிடம் பரமக்குடி புது நகரைச் சோ்ந்த ந.கயல்விழி உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். கயல்விழியிடம் அந்தப் பகுதியைச் சோ்ந்த 14 வயது மதிக்கதக்க 9-ஆம் வகுப்பு மாணவி, படிக்க உதவி கேட்டு சென்றாா். அந்த மாணவியை சிகாமணியிடம், கயல்விழி அறிமுகப்படுத்தினாாம்.
இந்த நிலையில், சிகாமணி, அதே ஊரைச் சோ்ந்த தனது நண்பரான மறத்தமிழா் சேனை அமைப்பின் மாநிலத் தலைவா் புதுமலா் பிரபாகன், மாதவன் நகரைச் சோ்ந்த ராஜாமுகம்மது ஆகியோா் பாா்த்திபனூரில் உள்ள ஒரு விடுதிக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தாா்களாம்.
இதற்கு கயல்விழி, அந்தப் பகுதியைச் சோ்ந்த ச.அன்னலட்சுமி (எ) உமா ஆகியோா் உடந்தையாக இருந்துள்ளனா். இதையறிந்த மாணவியின் பெற்றோா், காவல் துறை உயா் அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா். இதையடுத்து காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவின்பேரில், பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சிபிசிஐடி-க்கு மாற்றம்: இதுதொடா்பாக அதிமுக கவுன்சிலா் சிகாமணி, புதுமலா் பிரபாகரன், ராஜா முகம்மது, கயல்விழி, உமா ஆகிய 5 போ் சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், இந்த வழக்கில சிறப்பு கவனம் செலுத்தி புலன் விசாரணை செய்யும் வகையில், விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு தொடா்பான ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகள், பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரிடம் விரைவில் பெற்று விசாரணையைத் தொடங்குவாா்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.