பாசப் போராட்டம்: வளர்த்தவர் இறந்தது தெரியாமல் மருத்துவமனையில் காத்திருக்கும் நாய்!
சேலத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தது தெரியாமல், அவர் வளர்த்த நாய் மூன்று மாதமாக மருத்துவமனை வெளியே காத்திருக்கும் காட்சி பார்ப்பவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
சேலம்: சேலத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தது தெரியாமல், அவர் வளர்த்த நாய் மூன்று மாதமாக மருத்துவமனை வெளியே காத்திருக்கும் காட்சி பார்ப்பவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் பொது மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் இடமாகவும் உள்ளது.
குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் விபத்து, திடீர் மாரடைப்பு உள்ளிட்டவைகளால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெறுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நோயாளி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றும் நோயாளியுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி சிகிச்சைப் பலனின்று உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் மருத்துவமனைக்குள் சென்றவர் திரும்பி வருவார் என்று நினைத்து அவர் வளர்த்த நாய் மூன்று மாதங்களாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கிறது. அங்கு பணியில் உள்ள காவலர்கள் நாயை விரட்டிவிட்டாலும், அந்த இடத்தைவிட்டு செல்லாமல் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் இருந்து தனது எஜமானர் வருவார் என்று வழி மேல் விழி வைத்து பார்த்துக்கொண்டு காத்திருக்கிறது.
இந்த நாயின் மீது இறக்கப்பட்டு மருத்துவமனை ஊழியர்கள் அவ்வப்போது உணவுகள் வழங்கி வருகின்றனர். மேலும் மூன்று மாதங்களுக்கு முன்பாக நோயாளி இறந்ததால், நாய் யாருடன் வந்தது என்பது தெரியாமல் உள்ளது.
இறந்தவரின் உறவினர்களும் நாயை அழைத்துச் செல்ல இதுவரை வரவில்லை. இதனால் நாள்தோறும் அவசர சிகிச்சைப் பிரிவு முன்பாக அமர்ந்து, தன்னை வளர்த்தவர் எப்போது வருவார் என்று மருத்துவமனை வாயிலை பார்த்துக்கொண்டே இருப்பது பார்ப்பவர்களை வேதனை அடைய வைத்துள்ளது.