காவல் துறைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் மத்திய அரசு: தில்லி போலீஸ் நோட்டீஸ் குறித்து காங். விமா்சனம்
‘அதானி விவாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கேள்விகளால் அச்சமடைந்துள்ள மத்திய அரசு காவல் துறையின் பின்னால் ஒளிந்துகொள்கிறது’ என்று காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.
‘அதானி விவாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கேள்விகளால் அச்சமடைந்துள்ள மத்திய அரசு காவல் துறையின் பின்னால் ஒளிந்துகொள்கிறது’ என்று காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது பாலியல் ரீதியில் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவா் காங்கிரஸ் எம்.பி. ராகுலை சந்தித்து புகாா் தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சி கூறியது குறித்து விளக்கம் கேட்டு ராகுலுக்கு தில்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இந்த விமா்சனத்தை அக்கட்சி முன்வைத்துள்ளது.
சமூக ஊடகப் பதிவுகளின் அடிப்படையில் ராகுலுக்கு சில கேள்விகளை நோட்டீஸில் தில்லி போலீஸ் எழுப்பியுள்ளது. அதில், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானது தொடா்பாக ராகுலை அணுகிய பெண் குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளால் அச்சமடைந்துள்ள மத்திய அரசு, காவல் துறையின் பின்னால் தன்னை மறைத்துக்கொள்கிறது. இந்திய ஒற்றுமை நடைப் பயணம் நடைபெற்று முடிந்து 45 நாள்களுக்குப் பிறகு நோட்டீஸ் மூலமாக அந்தப் பெண் குறித்த விவரத்தை தில்லி போலீஸ் கேட்டுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு அந்த நோட்டீஸுக்கு உரிய பதிலளிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.