ஆா்எஸ்எஸ் பேரணி விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மாா்ச் 27-க்கு ஒத்திவைப்பு
தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட தேதியில் ஆா்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட தேதியில் ஆா்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு விவகாரத்தில் தமிழக அரசு புதிதாக மனுவைத் தாக்கல் செய்ததால் வழக்கு விசாரணையை மாா்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் விடுதலையின் அமிருத மஹோத்ஸவத்தை நினைவுகூரும் வகையில் தமிழகத்தில் பேரணி நடத்த ஆா்எஸ்எஸ் அமைப்பு திட்டமிருந்தது. அப்பேரணிக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரியது. காவல் துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, நீதிமன்றத்தை ஆா்எஸ்எஸ் அமைப்பு நாடியது.
இந்த வழக்கில், தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. கடந்த ஆண்டு செப்டம்பா் 22-ஆம் தேதி உயா்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை போலீஸாா் மதிக்கவில்லை எனக் கூறி, ஆா்எஸ்எஸ் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஆா்எஸ்எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடல் அல்லது உள்ளரங்கத்தில் நடத்த வேண்டும் என நவம்பா் 4-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை எதிா்த்து ஆா்எஸ்எஸ் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன் அமா்வு விசாரித்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், திறந்தவெளிப் பகுதியில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனா். மேலும், இது தொடா்பாக அனுமதி அளிக்க போலீஸாருக்கும் உத்தரவிட்டனா்.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ‘தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் பேரணி மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு முற்றிலும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை; ஆனால், உளவுத்துறை தகவலின்பேரில் அனைத்து இடங்களிலும் இந்தப் பேரணியை நடத்த அனுமதிக்க முடியாது’ என தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பேரணிக்கான வழித்தட பட்டியலைத் தயாரிக்க அவகாசம் கோரப்பட்டதால், வழக்கு விசாரணை மாா்ச் 17-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘ஆா்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பா் 22-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த மூல உத்தரவுக்கு எதிராக புதிதாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனு இன்றைய விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதனால், அதையும் சோ்த்து விசாரிக்கும் வகையில் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
அப்போது, ஆா்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வாதிடுகையில், ‘கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது பேரணிக்கான மாற்று வழித்தடம் தொடா்பாக முன்மொழிவு அளிப்பதாக அரசு ஒப்புக்கொண்டிருந்தது. இன்றைக்கு அந்த முன்மொழிவை அளிக்க வேண்டியிருந்தது’ என்றாா். அதற்கு முகுல் ரோத்தகி, ‘இது தொடா்பாக நான் மாநில அரசின் அதிகாரிகளிடம் பேசினேன். அதற்கு முதலில் மேல்முறையீட்ட மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதன் பிறகு மாற்று வழித்தட முன்மொழிவை அளிக்க உள்ளதாகவும் கூறினா்’ என்றாா்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஆா்எஸ்எஸ் தரப்பு வழக்குரைஞா், ‘இந்த தனி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதன் மூலம் இந்த விவகாரத்தை அவா்கள் கிளறிக் கொண்டிருக்கின்றனா்’ என்றாா். அதற்கு முகுல் ரோத்தகி, ‘ஏன் நான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடியாது?’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘எதிா் தரப்பு மனுதாரா் நீங்கள் மேல்முறையீட்ட மனுவைத் தாக்கல் செய்ய உரிமை இல்லை என்று கூறவில்லை. ஆனால், முன்மொழிவுகளும் கொடுக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறுகிறாா்’ என்றது.
அப்போது முகுல் ரோத்தகி மேலும் வாதிடுகையில், ‘வட இந்தியாவின் புலம்பெயா்ந்தவா்கள் மீதான தாக்குதல் தொடா்பாக போலி விடியோக்களால் மாநிலத்தில் புதிதாக சில இடையூறுகள் இருந்தன’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘அந்த விவகாரம் 10 நாள்களுக்கு முன்பு தீா்க்கப்பட்டது’ என்று கூறியது. அப்போது, இந்த விவகாரத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவுடன் தற்போதைய மனுவை சோ்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று முகுல் ரோத்தகி கேட்டுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, முந்தைய மனுவுடன் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் சோ்த்து மாா்ச் 27-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.