தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 37-வது இடத்திற்கு முன்னேறியது வேலூர்!

DIN

வேலூர்: பிளஸ் 2 பொதுத்தேர்ச்சி விகிதத்தில் கடந்தாண்டு தமிழகத்தின் கடைசியிலிருந்த (38 ஆவது இடம்) வேலூர் மாவட்டம், இவ்வாண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு 37 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதனடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் 89.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத வேலூர் மாவட்டத்திலுள்ள 66 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தமுள்ள 136 பள்ளிகளில் இருந்து 8,247 மாணவர்களும், 8,723 மாணவிகளும் என மொத்தம் 16,970 பேர் விண்ணப்பத்திருந்தனர். ஆனால், தேர்வினை 7,248 மாணவர்கள், 8,098 மாணவிகள் என மொத்தம் 15,346 பேர் மட்டுமே எழுதியிருந்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் 6094 மாணவர்கள், 7,595 மாணவிகள் என மொத்தம் 13,689 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 84.08 சதவீதம் பேரும், மாணவிகள் 93.79 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றதன் மூலம் இம்மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 89.20 சதவீதமாகும். இதன்மூலம், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் வேலூர் மாவட்டம் தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 37ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதம்: மாவட்டத்தில் மொத்தமுள்ள 66 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 3,353 மாணவர்கள் 4,815 மாணவிகள் என மொத்தம் 8,168 பேர் தேர்வெழுதியதில் 6,919 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.71 சதவீதமாகும்.

பள்ளிக்கல்வியில் முன்னேற்றம்...

2019ஆம் ஆண்டு வெளியான பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி வேலூர் மாவட்டம் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 85.47 சதவீத தேர்ச்சியுடனும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் 89.98 சதவீத தேர்ச்சியுடனும் கடைசி இடத்தை பிடித்திருந்தது. 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கரோனா பொதுமுடக்கத்தால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் நூறு சதவீத தேர்ச்சி அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டில் வேலூர் மாவட்டம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 86.69 சதவீதமும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 79.87 சதவீதமும் பெற்று மீண்டும் கடைசி இடத்தையே பெற்றிருந்தது.

அதன்படி, பள்ளிக்கல்வியில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில் இவ்வாண்டு தேர்ச்சி விகித்தை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. அதன்விளைவாக இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் 2.51 சதவீதம் முன்னேற்றி 37 ஆவது இடத்தை அடைந்திருப்பதாக கூறுகிறார் இம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி.

அவர் மேலும் கூறியது: கடந்தாண்டு வேலூர் மாவட்ட அரசுப்பள்ளிகள் 38ஆவது இடத்தில் இருந்த நிலையில் இவ்வாண்டு மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திட முதலில் பாடவாரியாக முதுகலை ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு பள்ளிவாரியாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மாணவர்களுக்கு மாதந்தோறும் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதனடிப்படையில், வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகள் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் 33 ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் மேலும் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மூன்று சிறைவாசிகள் தேர்ச்சி

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத 4 கைதிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் இருவர் தேர்வு எழுதாத நிலையில் தேர்வு எழுதிய இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், பெண்கள் தனிச்சிறையில் இருந்து விண்ணப்பித்திருந்த இரு கைதிகளில் ஒருவர் தேர்வு எழுதாத நிலையில் தேர்வு எழுதிய மற்றொருவர் தேர்ச்சி பெற்றிருப்பதாக சிறை காவல் கண்காணிப்பாளர் அப்துல்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT