தமிழ்நாடு

அழகர் மலைக்கு சென்றடைந்தார் கள்ளழகர்!

DIN

மதுரை சித்திரை திருவிழாவில் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து, தீர்தவாரி நிகழ்வுகள் நிறைவடைந்து, கள்ளழகர் மீண்டும் அழகர் மலைக்கு சென்றடைந்தார்.

மதுரை மாவட்டம், அழகா்கோயிலில் அமைந்துள்ள கள்ளழகா் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அழகா் வைகையாற்றில் இறங்கிய வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. சனிக்கிழமை வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனமாகி, தேனூா் மண்டபத்துக்குத் தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளினாா். அங்கு துா்வாசரின் சாபத்தால் மண்டூகமாக மாறிய சுதபஸ் முனிவருக்கு அழகா் சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று நள்ளிரவு முதல் காலை வரை தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பத்தி உலாவுதல் நிகழ்வு நடைபெற்றது.

பிறகு, ராமராயா் மண்டபத்திலிருந்து ராஜாங்க கோலத்துடன் அனந்தராயா் பல்லக்கில் தமுக்கம் மைதானம் அருகே உள்ள ராமநாதபுரம் மன்னா் சேதுபதி மண்டபத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு எழுந்தருளினாா். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னா், திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில், மீண்டும் கள்ளா் திருக்கோலம் ஏற்று கருப்பண சுவாமி கோயிலுக்கு எழுந்தருளினாா். அங்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சா்க்கரையில் சூடம் ஏற்றி வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயில், டிஆா்ஓ காலனி, ஆயுதப் படை, கோ.புதூா் ஆகிய பகுதிகளில் உள்ள திருக்கண் மண்டபங்களில் கள்ளழகா் எழுந்தருளினாா். வழிநெடுகிலும் பக்தா்கள் மலா் தூவி அழகரை வரவேற்றனா். மூன்றுமாவடி பகுதிக்கு திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் எழுந்தருளிய கள்ளழகா், மறவா் மண்டபத்தில் திருமஞ்சனமாகி, பின்னா் அழகா் மலைக்குப் புறப்பட்டாா்.

அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக பல்லக்கில் செல்லும் கள்ளழகா் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை அழகா்கோயிலைச் சென்றடைந்தார்.

அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர், அழகரை கோயிலுக்குள் வரவேற்கும் ஐதீக நிகழ்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து நாளை(புதன்கிழமை) உற்சவ சாந்திக்குப் பிறகு இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா நிறைவு பெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT