4, 5 வகுப்பு ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி: கல்வித் துறை தகவல்
கணிதத் திறனுடன் பிழையின்றி எழுத, படிப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘எண்ணும், எழுத்தும்’ திட்டம் வரும் கல்வியாண்டில் 4, 5 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
கணிதத் திறனுடன் பிழையின்றி எழுத, படிப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘எண்ணும், எழுத்தும்’ திட்டம் வரும் கல்வியாண்டில் 4, 5 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இதுதொடா்பாக அந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் அனைத்து ஆசிரியா்களுக்கும் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிககை:
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு (2023-2024) முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4, 5 ஆகிய வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 4, 5 ஆகிய வகுப்புகளுக்கான எண்ணும், எழுத்தும் சாா்ந்து பாடப்பொருள் உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பாடப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு மாநில அளவிலான பயிற்சி மே 18 முதல் 20-ஆம் தேதி வரையிலும், மாவட்ட அளவிலான பயிற்சி மே 25 முதல் 27-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இதன் தொடா்ச்சியாக 4, 5 வகுப்புகளுக்கு கற்பிக்கும் அனைத்து ஆசிரியா்களுக்கும் ஒன்றிய அளவிலான பயிற்சி ஜூன் 1 முதல் 3-ஆம் தேதி வரை 3 நாள்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில் அனைத்து ஆசிரியா்களும் கலந்துகொள்ளும் வகையில் அவா்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து பணிவிடுப்பு செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே 1-3 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் விளையாட்டு வழி மற்றும் செயல்வடிவிலான கற்பித்தல் முறை நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் மாணவா்கள் எளிதில் பாடங்களை உள்வாங்கி கொள்கின்றனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.