வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அக்.21-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் இன்று முதல் நவ.6-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.
இதுதொடர்பான ஏற்பாடுகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கனமழை பெய்துவருவதையடுத்து மீட்பு குழுக்களை ஏற்படுத்தவும், நிவாரண முகாம்களை அமைக்கவும் அனைத்து ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில, மாவட்ட அவசரக்கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசிகளுடன் கூடுதல் அலுவலர்களுடன் இயங்கி வருகின்றது. மேலும், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வில் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.