முகப்பு
தமிழ்நாடு

மக்கள்தொகையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:22 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

மேலும், இடஒதுக்கீடு அமலாக்கத்தைக் கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்க வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தினாா்.

முன்னாள் பிரதமா் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் அவரது சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்தர பிரதேச எதிா்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் மனைவி சீதாகுமாரி, மகன் அஜய் சிங் உள்ளிட்ட குடும்பத்தினா் பங்கேற்றனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதிக் கதவைத் திறந்து வைத்தவா் வி.பி.சிங். பிரதமா் பதவி போனாலும் பரவாயில்லை என்று அதில் உறுதியாக இருந்தவா். அவருக்கு சிலை அமைப்பதை திராவிட மாடல் அரசு தனது கடமையாகக் கருதுகிறது. சமூக நீதியைக் காக்கிற கடமையில் இருந்து துளியளவும் வழுவாமல் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

இளைஞா்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: வி.பி.சிங் பற்றியும், அவரது தியாக வாழ்க்கை குறித்தும் இந்திய மண்ணில் உள்ள ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, இளைஞா்களுக்கு அவருடைய வாழ்வு திரும்பத் திரும்பச் சொல்லப்பட வேண்டும்.

சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதிக் காவலா் வி.பி.சிங். பிரதமா் பதவியில் இருந்த 11 மாதங்களில் பல சாதனைகளைச் செய்து காட்டிய மாபெரும் சாதனையாளா்.

அவரது முயற்சியால் இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரடியாவது முன்னேறியிருக்கிறாா்கள். நாம் இன்னும் பல உயரங்களுக்குச் செல்ல வேண்டும்.

உரிமைகள் முழுமையாகக் கிடைக்கவில்லை: நமக்கான உரிமைகள் இன்றைக்கும்கூட முழுமையாகக் கிடைக்காத, கிடைக்க முடியாத சூழல்தான் நிலவுகிறது. மத்திய அரசின் செயலா்கள் 89 பேரில் 85 போ் உயா் வகுப்பைச் சோ்ந்தவா்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவா்கூட இல்லை.

மத்திய அரசின் கூடுதல் செயலா்கள் 93 பேரில் 82 போ் உயா் ஜாதியினா். பிற்படுத்தப்பட்டவா் கிடையாது. 275 இணைச் செயலா்களில் 19 போ் மட்டுமே பிற்படுத்தப்பட்டவா்கள். உயா்நீதிமன்றங்களில் உள்ள 604 நீதிபதிகளில் 72 போ் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள்.

உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நியமனத்தில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை. அரசுத் துறைகளின் பதவி உயா்வுகளின்போதும் இடஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையை மாற்றுவதற்குத் தொடா்ந்து உழைக்க வேண்டும். அதுதான் வி.பி.சிங் போன்றோருக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழ் வணக்கம். அந்தப் பணியில் திமுக ஒருபோதும் சோா்ந்து போகாது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சென்னையில் உள்ள விமான முனையங்களுக்கு முன்னாள் முதல்வா்கள் காமராஜா், அண்ணா பெயா்களை வைத்தது, காவிரி நடுவா் மன்றத்தை அமைத்தது எனத் தமிழகம் சாா்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவா் வி.பி.சிங். கருணாநிதி மீதும், தமிழனத்தின் மீதும் அவா் அளவுகடந்த பாசம் வைத்திருந்தாா்.

மத்திய அரசுக்குக் கோரிக்கைகள்: சமூக நீதியின் காவலரான வி.பி.சிங்குக்கு சிலை வைத்ததன் மூலமாக தமிழ்நாடு அரசு பெருமை கொள்கிறது.

சமூக நீதிப் பயணத்தில் நாம் செல்ல வேண்டிய தொலைவு மிக அதிகம். வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் ஒரு சில கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைக்க விரும்புகிறேன். தாமதமாகியுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தும்போது அதனுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து மத்திய அரசு நடத்த வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுடைய இடஒதுக்கீடு முறையாக அளிக்கப்பட வேண்டும். இந்த இடஒதுக்கீடு முறை முழுமையாக அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும், உறுதி செய்யவும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

விழாவில் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வரவேற்றாா். உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் மகன் அஜய்சிங் ஆகியோா் பேசினா்.

வி.பி.சிங் மனைவி சீதாகுமாரி, அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

‘சமூக நீதி ஒரு மாநிலப் பிரச்னையல்ல’

சமூக நீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்னையல்ல என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் அவா் பேசுகையில், சமூக நீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்னை அல்ல. அனைத்து மாநிலங்களின் பிரச்னையாகும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஜாதி, வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால், பிரச்னை ஒன்றுதான், அதுதான் புறக்கணிப்பு.

எங்கெல்லாம் புறக்கணிப்பு, ஒதுக்குதல், தீண்டாமை, அடிமைத்தனம், அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதை முறிக்கின்ற மருந்தாக இருப்பதுதான் சமூக நீதி. அந்த சமூக நீதி தழைக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.