செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து வரும் நிலையில் அங்கு இரண்டு முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு கடந்த 16- ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு இன்று(வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை: உயர்நீதிமன்றம்
அதன்படி, அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மருத்துவக் காரணத்தை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது, செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் ஜாமீன் வழங்கினால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது என்று நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக நாளையே விசாரிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, வழக்கு விசாரணை வருகிற அக். 30 ஆம் தேதி நடைபெறும் என்று கூறியுள்ளது.