தமிழ்நாடு

தொல்லியல் அலுவலர் அமர்நாத் இராமகிருஷ்ணா மீண்டும் இடமாற்றம்

DIN

தொல்லியல் அலுவலர் அமர்நாத் இராமகிருஷ்ணாவை தில்லிக்கு பணியிட மாற்றம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் ஆய்வு கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொழில்பொருள் ஆய்வுத் துறை தில்லிக்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.

வழக்கமாக இந்தப் பதவிகளை வகிப்போர் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணா, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் அவர் முன்கூட்டியே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கீழடியில் நடந்த இரண்டு கட்ட அகழ் ஆராய்ச்சிகள் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம்தான் 982 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்திருந்தார். இந்தநிலையில்தான், தமிழகத்தின் கீழடியில் நடைபெற்று வரும் அகழ் ஆய்வுப் பணிகளை முடக்கும் வகையில், இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற நாகரிகத்தின் தடயம் முதன்முதலாக கீழடியில் கண்டறியப்பட்டது. இதை ஆய்ந்தறிந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை பாராட்டுவதற்கு பதில் உடனடியாக அவரை தொலைவில் உள்ள அசாம் மாநிலத்துக்கு மத்திய அரசு மாறுதல் செய்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தவுடன், மூன்றாம் கட்ட ஆய்வு என்ற பெயரில் ஓர் ஆய்வை மத்திய அரசு நடத்தி, புதிதாக எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி, அதை முடிக்குமாறு ஆணையிட்டது.

தமிழக மக்கள் கொதித்தெழுந்தவுடன், தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மற்றும் துறையின் செயலாளர் ஆகியோர் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை தமிழக தொல்லியல் துறையின் சார்பில் நடத்த முன்வந்து ஆணை பிறப்பித்தது பாராட்டத்தக்கது. இதன் விளைவாக புதிய வரலாற்றுச் செய்திகள் நமக்குக் கிடைத்தன.

கீழடியில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 5 மற்றும் 6ஆம் கட்ட அகழாய்வின்போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. இவற்றின் காலம் கி.மு. 580 என்று அங்கு கணித்துக் கூறியுள்ளனர். அதாவது கீழடியின் நாகரிகம் என்பது கி.மு. 6ஆம் நுற்றாண்டு முதல் கி.பி. 1ஆம் நூற்றாண்டு வரையிலான செறிந்த நாகரிகம் கொண்ட பகுதியாக விளங்கியிருக்க வேண்டும் என்பது இதன் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிட மாற்றம் குறித்து கி.வீரமணி வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், தமிழ்நாட்டில் தொல்பொருள் ஆய்வு என்பது மிகப்பெரிய அளவில் - உலகத்தாரின், ஆய்வாளர்களின் கவனத்தையும், ஆய்வினையும் ஈர்த்துவரும் அளவுக்கு நாளும் பெருகிவருகிறது.

நமது முதலமைச்சரும் இதில் தனிச்சிறப்புடன் கூடுதல் கவனம் செலுத்துவதால், இந்தப் பழைய வரலாற்றுப் பெருமை வாய்ந்த திராவிட நாகரிகத்தின் தொன்மை குறித்து புதுப்புது தடயங்கள், சான்றுகள் கிடைத்துவரும் வேளையில், அவற்றை ஒழுங்குபடுத்தி அவற்றின் தனிப்பெரும் வரலாற்று ஆய்வுபற்றிய குறிப்புகளை மிகத் தெளிவாகத் தரும் ஆற்றல் வாய்ந்த, அனுபவம் நிறைந்த அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களை திடீரென்று எந்தக் காரணமும் இல்லாமல் தில்லிக்கு, மத்திய அரசு மாற்றியிருப்பது - தமிழ்நாட்டுப் பழம்பெரும் நாகரிகத் தரவுகள், சான்றாவணங்களை ஒழுங்குபடுத்தி, பெருமையுடன் உலகு கூர்ந்து நோக்குவதைத் தடுக்கவே இந்தச் சூழ்ச்சி! அதில் அதிக ஈடுபாட்டுடன் நேர்மையுடன் கடமையாற்றிய அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களை இப்படி தமிழ்நாட்டின் புதைபொருள் ஆராய்ச்சியைத் தண்டிப்பதுபோல மாற்றியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

இதற்கு முன்பும் அவரைப் பந்தாடினார்கள் - மீண்டும் தமிழ்நாடு வந்தார்.

இதுபற்றி தமிழ்நாடு அரசு குறிப்பாக நமது முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய தொல்பொருள் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி, அவரை தமிழ்நாட்டிலேயே தொடரச் செய்தால், தமிழ்நாட்டுப் புதை பொருள் ‘ஆய்வுகள்' தொய்வின்றித் தொடரும் வாய்ப்பு ஏற்படும். இதனைப் பொதுநலம் கருதி கூறுகிறோம் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

SCROLL FOR NEXT