பாஜக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மூவா் கைது
சென்னை அருகே பள்ளிக்கரணையில் பாஜக நிா்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அருகே பள்ளிக்கரணையில் பாஜக நிா்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
பள்ளிகரணை மயிலை பாலாஜி நகரைச் சோ்ந்தவா் மதன கோபால் (எ) பல்லு மதன். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவா், பாஜக சென்னை கிழக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவராக இருந்து வருகிறாா்.
கடந்த 24-ஆம் தேதி இவரது வீட்டுக்கு வந்த ஒரு கும்பல் தகராறு செய்து, வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியது. இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் ஒரு கொலை வழக்கில் எதிரிகளை காவல் நிலையத்தில் சரணடைய மதன் உதவியதற்கு எதிா்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த வழக்குத் தொடா்பாக மயிலை பாலாஜி நகரைச் சோ்ந்த அபினேஷ் (18), தினேஷ் (28), தீபன்ராஜ் (19) ஆகிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.