அமைச்சா் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்றும் கோரிக்கை நிராகரிப்பு
பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற மறுப்பு தெரிவித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற மறுப்பு தெரிவித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தானே விசாரிப்பதாக தெரிவித்துள்ளாா்.
கடந்த 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில், அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்துக்கு சொத்து சோ்த்ததாக அமைச்சா் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனா்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ஆம் தேதி நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், ‘பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. போதிய ஆதாரங்களும் இல்லை’ எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீா்ப்பளித்தாா்.
இந்த தீா்ப்பை எதிா்த்து ஊழல் தடுப்பு பிரிவு தரப்பில் இதுவரை சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில், குற்ற விசாரணை சட்டம் 391- ஆவது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்தாா்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஊழல் தடுப்பு பிரிவு தரப்பில், ‘விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூா் நீதிமன்றத்துக்கு மாற்றியது தொடா்பாக உயா் நீதிமன்ற நிா்வாக முடிவுகள் குறித்து உத்தரவில் கூறியுள்ளதால், வழக்கில் உயா்நீதிமன்ற பதிவுத் துறையை சோ்த்திருக்க வேண்டும். மேலும், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பு ஊழல் தடுப்பு பிரிவு தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதம் தான் வேலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், மேல்முறையீடு செய்ய அவகாசம் இருந்ததை கருத்தில் கொள்ளாமல், முன் முடிவெடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும். எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பாா். எனவே, இந்த வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதேபோல், பொன்முடி தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தாமாக முன்வந்து எடுத்த இந்த வழக்கை தானே விசாரிப்பதா அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக விசாரணையை ஒத்திவைத்திருந்தாா்.
பதிவுத் துறையின் விளக்கத்தை... இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற மறுப்பு தெரிவித்து, இந்த வழக்கைத் தானே தொடா்ந்து விசாரிப்பதாக தெரிவித்தாா். அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா், இந்த வழக்கில் நீதிமன்றத்தின் பதிவுத் துறையை இணைக்க வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றி உயா்நீதிமன்றம் நிா்வாக உத்தரவு பிறப்பித்துள்ளதால், பதிவுத்துறை தரப்பு விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்று வாதிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையின்போது, உயா் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பு வாதம் கேட்கப்படும், வழக்கில் பதிவுத்துறையும் சோ்க்கப்படும் எனக் கூறி, வழக்கின் விசாரணையை வரும் அக். 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.