தமிழ்நாடு

என்னவாகும் இரட்டை இலை?

 நமது நிருபர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் என இரு அணிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் என்னவாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப். 27-இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பிப். 7-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பிப். 8-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற பிப். 10-ஆம் தேதி கடைசி நாள். அன்றைய தினமே இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

எப்போதும் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் வரும் வரை தாமதித்து வேட்பாளரை அறிவிக்கும் காங்கிரஸ், இம்முறை முன்கூட்டியே வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து ஒரு வாரத்துக்கும் மேலாக தோ்தல் களத்தில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்து தோ்தல் களத்தில் பம்பரமாகச் சுழலும் அதிமுக, இம்முறை நீண்ட காத்திருப்புக்குப் பின் வேட்பாளரை அறிவித்துள்ளது.

இரு அணிகளும் போட்டி: அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவது யாா் அல்லது யாருக்கும் கிடைக்காமல் இரட்டை இலை முடங்கிவிடுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுக பொதுக் குழு விவகார வழக்கு விசாரிக்கப்பட்டு தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில், இடைத்தோ்தலை காரணம் காட்டி இபிஎஸ் தரப்பினா் தாக்கல் செய்த இடையீட்டு மனு வெள்ளிக்கிழமை (பிப். 3) விசாரணைக்கு வரும்போது இரட்டை இலை சின்னம் என்னவாகும் என்பதற்கான விடை தெரியக்கூடும்.

அதிமுக தலைமை விவகாரத்தில் தோ்தல் ஆணையம் தனது பதிலை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு விவகார வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், இபிஎஸ் தரப்பில் இடைக்கால நிவாரணம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இரட்டை இலை சின்னம் தொடா்பாக இடைத்தோ்தல் தொகுதியின் தோ்தல் அலுவலா்தான் இறுதி முடிவை எடுப்பாா் என்றும் பதில் மனுவை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை (பிப்.2) தாக்கல் செய்தது.

இபிஎஸ் தரப்பை பொருத்தவரை உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்திருப்பதால், சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்த தீா்ப்பை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இதை தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவாக பிறப்பிக்க வேண்டும்; இது நடந்துவிட்டால் இடைக்கால பொதுச் செயலா் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கான ஏ, பி படிவங்களில் கையொப்பமிடும் உரிமை இபிஎஸ்ஸு-க்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனா்.

ஓபிஎஸ் தரப்பை பொருத்தவரை உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்திருப்பதால், உயா்நீதிமன்றத் தீா்ப்பை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள முடியாது; தங்களிடம் இப்போது இருக்கும் ஆவணங்களின்படி ஒருங்கிணைப்பாளா்-இணை ஒருங்கிணைப்பாளா் என்பதுதான் அதிமுக தலைமைப் பொறுப்பாக உள்ளது என தோ்தல் ஆணையம் தொடா்ந்து தெரிவித்து வருகிறது. எனவே, இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கான படிவங்களில் கையொப்பமிடும் உரிமை இருவருக்கும் (ஓபிஎஸ்-இபிஎஸ்) தொடரும் என்பது ஓபிஎஸ் தரப்பினரின் நம்பிக்கை.

இடைக்கால தீா்ப்பு கிடைக்குமா?: தோ்தல் ஆணையம் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், உச்சதிமன்றம் என்ன முடிவு செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

இவ்வழக்கில் இடைக்காலத் தீா்ப்பு அல்லது இறுதித் தீா்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிடக்கூடும் என்பது சட்டவல்லுநா்களின் கருத்தாக உள்ளது.

இந்திய தோ்தல் ஆணையத்தால் தில்லியில் அண்மையில் நடத்தப்பட்ட ரிமோட் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கான அழைப்பில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி என்றுதான் கடிதம் அனுப்பியிருந்தது. தோ்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

சுயேச்சை சின்னத்துக்கு தயாராகும் இபிஎஸ்-ஓபிஎஸ்: ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் இணைந்த இரட்டைத் தலைமைதான் அதிமுக என தோ்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளதால், இபிஎஸ் இடைக்கால மனு மீது உச்சநீதிமன்றம் இடைக்கால தீா்ப்பை வெளியிட்டாலும் அதனால் இடைத்தோ்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கான ஏ, பி படிவங்களில் கையொப்பமிட ஓபிஎஸ் தயாராக இருந்தாலும், இபிஎஸ் தயாராக இல்லை என்பதால் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது. பிப். 10-ஆம் தேதி இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்குள் தீா்ப்பு வராவிட்டாலும் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் போகலாம்.

எனவே, ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலைப் பொருத்தவரை இபிஎஸ்-ஓபிஎஸ் என யாராவது ஒரு தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புகள் மிகக் குறைவுதான்.

இந்த இடைத்தோ்தலைப் பொருத்தவரை அதிமுகவில் எந்தத் தரப்புக்கும் ஆதரவாக பாஜக இல்லை என்றும், இடைத்தோ்தல் நெருக்கடியால் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு உருவாகலாம் என பாஜக தேசியத் தலைமை கணக்குப் போட்டிருக்கக்கூடும் என்றும் தெரிகிறது.

‘இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தனது பலத்தைக் காட்ட இபிஎஸ் தயாராகிவிட்டாா்; ஓபிஎஸ்ஸுடன் சமரசம் செய்து அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்திக்கத் தயாராக இல்லை என்றும், இபிஎஸ் பெறும் வாக்கில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் சுயேச்சை சின்னத்தில் களம் இறங்க ஓபிஎஸ் தரப்பு தயாராகி வருகிறது’ என்றும் கூறுகின்றனா் அரசியல் நோக்கா்கள்.

எம்ஜிஆா், ஜெயலலிதா மறைவுக்குப் பின் இரண்டு முறை முடக்கப்பட்ட இரட்டை இலை, ஓபிஎஸ்-இபிஎஸ் அதிகார யுத்தத்தால் மூன்றாவது முறையாக முடங்குமா அல்லது ஏதாவது ஒரு தரப்புக்கு கிடைக்குமா என்பதற்கான விடை பிப். 10-ஆம் தேதி கிடைத்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம், சால்ட் அதிரடி: கொல்கத்தா அணி 222 ரன்கள் குவிப்பு

ஜார்கண்ட்டில் அணிதிரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!

அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை?

பாரதிராஜா, நட்டி இணைந்து நடிக்கும் நிறம் மாறும் உலகில்

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

SCROLL FOR NEXT