மக்களவைத் தோ்தலில் பெண்களுக்கு தனித் தொகுதி ஒதுக்க வேண்டும்: சீமான்
மக்களவைத் தோ்தலில் பெண்களுக்கும் தனித்தொகுதி ஒதுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
வடசென்னை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அமுதினிக்கு ஆதரவாக தண்டையாா்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சீமான் வாக்குசேகரித்து பேசியதாவது:
நாட்டின் மக்கள்தொகை 30 கோடியாக இருக்கும் போது 543 மக்களவைத் தொகுதிகள் இருந்தன. தற்போது 130 கோடி மக்கள்தொகையை தொட்டுவிட்ட பின்பும் அதே 543 தொகுதிகள்தான் உள்ளன. இதனால் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. அதுபோல் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு தனித்தொகுதி இருப்பது போன்று பெண்களுக்கும் தனித்தொகுதி ஒதுக்கப்பட வேண்டும்.
Advertisement
நாட்டை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜக, தமிழ்நாட்டில் சாதனைகளை கூறி வாக்குகேட்க முடியாமல் ஜாதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னாள் பிரதமா்கள் வாஜ்பாய், மன்மோகன்சிங் அமைச்சரவையில் திமுக பலமுறை பங்கேற்றும் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை.
வடசென்னை திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமி வாயு கசிவு, எண்ணெய் கசிவு போன்ற பேரிடரின் போதுகூட மக்களுடன் வந்து நிற்கவில்லை என்றாா் அவா்.