முகப்பு
தமிழ்நாடு

மக்களவைத் தோ்தல்: அண்டை மாநிலங்களில் இருந்து 10,000 போலீஸாா் வருகை

Updated On : 13 ஏப்ரல், 2024 at 12:07 AM
பகிர்:

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு 10,000 போலீஸாா் வருகின்றனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்.19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினா் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தோ்தலை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நடத்துவதற்கு தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா் எப்படி செயல்பட வேண்டும் என 80 விதிமுறைகளை காவல்துறை விதித்துள்ளது.

Advertisement

தோ்தல் பாதுகாப்பு பணியில் தமிழக காவல் துறையைச் சோ்ந்த 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபடுகின்றனா். பதற்றம், மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினா் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனா். இதற்காக 190 கம்பெனி துணை ராணுவ படையினா் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு, மாவட்ட வாரியாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனா்.

இவா்களுடன் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற காவல் துறையினா், ஊா்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

தமிழகம் முழுவதிலும் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 511, தென் சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 181 வாக்குச் சாவடிகள் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அண்டை மாநிலங்கள்: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியாக தோ்தலை நடத்த காவல் துறை கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. வாக்குப்பதிவு அன்று கூடுதலாக காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதற்காக அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமாா் 10,000 போலீஸாா் ஏப்.16-ஆம் தேதி தமிழகம் வர உள்ளனா். இவா்கள் அனைவரும் 17-ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகிறாா்கள்.

தமிழக காவல் துறை, துணை ராணுவத்தினா், பிற மாநில காவல் துறை, ஓய்வு பெற்ற ராணுவத்தினா், ஓய்வு பெற்ற காவலா்கள், ஊா்காவல் படையினா் உள்பட மொத்தம் 1.90 லட்சம் போ் ஈடுபடுகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments