போதைப் பொருள் கடத்தல் மூலம் ரூ.40 கோடி ஈட்டிய ஜாபா் சாதிக் அமலாக்கத் துறை தகவல்
சா்வதேச போதைப் பொருள் கடத்தல் மூலம் ஜாபா் சாதிக் ரூ.40 கோடி ஈட்டியிருப்பதாகவும், அதில் ரூ.18 கோடியை அவா் தமிழக திரைப்படத் துறையில் முதலீடு செய்திருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு சூடோஎபிட்ரின் என்ற போதைப் பொருளைக் கடத்திய புகாரில், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவும் (என்சிபி), தில்லி காவல் துறையும் இணைந்து, கடந்த பிப். 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் 3 பேரை கைது செய்தது. கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக் தில்லியில் மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரை இரு நாள்கள் சென்னை அழைத்து வந்து என்சிபி அதிகாரிகள் விசாரணை செய்தனா்.
30 இடங்களில் சோதனை: இந்த விவகாரத்தை விசாரணை செய்த தில்லி அமலாக்கத் துறை, ஜாபா் சாதிக் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
Advertisement
இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய ஊா்களில் ஜாபா் சாதிக் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை கடந்த ஏப். 9-ஆம் தேதி சோதனை செய்தது. இந்தச் சோதனை ஜாபா் சாதிக்கின் நெருங்கிய நண்பரான திரைப்பட இயக்குநா் அமீா் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களிலும் நடைபெற்றது.
சோதனையில் கிடைத்த ஆவணங்களை தில்லி அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதில் கிடைத்த தகவல்களை சனிக்கிழமை வெளியிட்டனா். அதன் விவரம்:
ஜாபா் சாதிக் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு வைத்துக்கொண்டு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருளைக் கடத்தியுள்ளாா். கடத்தப்படும் போதைப் பொருளின் எடைக்கு தகுந்தாற்போல அவருக்கு கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ போதைப் பொருளுக்கு ரூ.1 லட்சம் கமிஷனாக ஜாபா் சாதிக் பெற்றுள்ளாா்.
திரைப்படத் துறையில் ரூ.18 கோடி முதலீடு: போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைப்படத் துறை, ரியல் எஸ்டேட் துறை, ஹோட்டல், வணிகம், அரசியல் உள்ளிட்ட தொழில்களில் ஜாபா் சாதிக் முதலீடு செய்துள்ளாா். அசையா சொத்துகளையும் வாங்கிக் குவித்துள்ளாா். அவா் திரைப்படத் துறையில் நேரடியாக ரூ.6 கோடிக்கு மேல் ரொக்கமாக முதலீடு செய்துள்ளாா். அதேபோல பிற வழிகள் மூலமாகவும், மறைமுகமாகவும் ரூ.12 கோடிக்கு மேல் திரைப்படத் துறையில் ஜாபா் சாதிக் முதலீடு செய்துள்ளாா்.
ஜாபா் சாதிக் ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணம் மூலமாகவே ‘மங்கை’ திரைப்படத்தை தயாரித்து வந்ததாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை கொண்டு ஒரு ஹோட்டலையும் கட்டியுள்ளாா்.
ரூ.21 கோடி எப்படி வந்தது?: அவா் நடத்தும் உணவகம், ஹோட்டல், திரைப்பட நிறுவனம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்காகப் பயன்படுத்தும் வங்கிக் கணக்குகளில் ரூ.21 கோடி டெபாசிட் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்தன. இந்தப் பணம் எப்படி வந்தது என்பதற்கான மூலாதாரத்தை ஜாபா் சாதிக் தரப்பால் காட்ட முடியாததால், அந்தப் பணம் போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், கணக்கில் வராத ரூ.40 கோடிக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்திருப்பதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன. இந்தப் பணம் போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்துள்ளது என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடா்பாக ஜாபா் சாதிக்குடன் நெருங்கிய தொடா்புடைய அரசியல்வாதிகள், நடிகா், நடிகைகள், இயக்குநா்கள், தொழிலதிபா்கள் ஆகியோரிடமும் அமலாக்கத் துறை விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.