அம்பேத்கா் மணி மண்டபத்தில் அடிப்படை வசதிகளை செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
சட்டமேதை அம்பேத்கா் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை அம்பேத்கா் மணி மண்டபத்தில் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தருவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பேத்கரின் 134-ஆவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கா் மணி மண்டபத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்குரைஞா்கள் செந்தமிழ்செல்வி, நிரஞ்சன் விஜயன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
அந்த மனுவில், ‘மணி மண்டப வளாகத்தில், அம்பேத்கரின் எழுத்துகள், உரைகளின் தொகுப்பு புத்தகங்களை விற்பனைக்கு காட்சிப்படுத்த அனுமதிக்க வேண்டும். பிறந்த நாளன்று, அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த வரும் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
Advertisement
இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்.வைகை, மணி மண்டபத்தில் அம்பேத்கா் புத்தகங்களைக் காட்சிப்படுத்த அனுமதி கோரிய மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என வாதிட்டாா்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், ‘விழாவில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. கூடாரம் அமைக்கப்பட்டு, வரக்கூடியவா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தனிப்பட்ட வெளியீட்டாளரின் புத்தகங்களைக் காட்சிப்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்குவதில்லை. அவ்வாறு அனுமதி வழங்கும் பட்சத்தில், பல வெளியீட்டாளா்கள் தங்கள் வெளியீடுகளை விற்பனை செய்ய இடம் ஒதுக்கக் கோரும் சூழ்நிலை உருவாகும்’”எனத் தெரிவித்தாா்.
மேலும், மனுதாரா்கள் விரும்பினால் மணிமண்டபத்தில் உள்ள நூலகத்தில், தங்கள் புத்தகங்களைக் காட்சிப்படுத்த அனுமதி கோரி, விண்ணப்பிக்கலாம்”என்றும் அவா் தெரிவித்தாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அம்பேத்கா் பிறந்த நாளில், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மணி மண்டபத்துக்கு வருகை தருவாா்கள் என்பதால், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதுடன், பொதுமக்களுக்கு தேவையான போதிய அடிப்படை வசதிகளை அரசு செய்ய வேண்டும்”என உத்தரவிட்டாா்.
புத்தகங்களை காட்சிப்படுத்த தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என்பது அரசின் முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரா்கள் கோரும் நிவாரணம் வழங்க முடியாது என்பதால், புத்தகங்களை, நுாலகத்தில் காட்சிப்படுத்துவது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கலாம்.
பொதுநலன், நடைமுறைகளைப் பின்பற்றி, அவற்றை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்”எனக் கூறி வழக்கை நீதிபதி முடித்துவைத்தாா்.