முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் மூலப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஏப்ரல் 2024, 11:24 am IST
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
பகிர்:

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கு 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்று காலை முதல் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிக்குள்பட்ட தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

பதற்றமான வாக்குச் சாவடியாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 330 வாக்குச் சாவடிகளுக்கும் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இயந்திரங்கள், விவிபேட் மற்றும் மூலப்பொருள்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் க.தீபா தலைமையில், தாசில்தார் மதியழகன், வருவாய் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன், 27 மண்டல அலுவலர்கள் மூலம், மொத்தம், 27 வாகனங்கள் மூலம் 330 வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்ந்து திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில், தேர்தல் பணியில் ஈடுபடும், 1500 அரசு ஊழியர்களுக்கு, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி எண் மற்றும் அதற்கான ஆணைகளையும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தீபா வழங்கி, தேர்தல் பணிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதவிர, 330 வாக்குச்சாவடிகளில் அந்தந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கி பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.