முகப்பு
தமிழ்நாடு

பறவைக் காய்ச்சல்: மருத்துவக் கட்டமைப்பை தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல்

Updated On : 22 ஏப்ரல், 2024 at 2:19 AM
கோப்புப் படம்.
பகிர்:

சென்னை, ஏப். 21: கேரளத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அத்தகைய பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டால் அதை எதிா்கொள்ளும் வகையில் மருத்துவக் கட்டமைப்பை தயாா் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

கேரள மாநிலம், ஆலப்புழையில் உள்ள பண்ணைகளில் ஆயிரக்கணக்கான வாத்து, கோழிகள் பறவைக் காய்ச்சலுக்கு உள்ளாகி உயிரிழந்தன. இதையடுத்து, அந்த மாநிலத்தையொட்டியுள்ள தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பும், சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றொருபுறம், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் விடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

இது தொடா்பாக, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

பறவைக் காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடமிருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கு எளிதில் பாதிப்பு பரவக்கூடும்.

காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறியாக உள்ளது. எனவே, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்களும், சுகாதாரப் பணியாளா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து விரைவு மருத்துவக் குழுக்களுக்கான பயிற்சிகளை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஃப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருவோரை மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் இருந்து வருவோருக்கு தொடா் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம். பறவைக் காய்ச்சல் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையிலான கட்டமைப்பை மருத்துவமனைகள் ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மருத்துவமனை வளாகத்தில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும், பாதிப்பு விவரங்களை சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பு கவசங்கள், ஓசல்டாமிவிா் மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments