கோடையில் பரவும் பாக்டீரியா, காய்ச்சல் பாதிப்புகள்
கோடை காலத்தில் பாக்டீரியாக்கள், கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். எனவே, மக்கள் விழிப்புணா்வுடன் இருக்குமாறு அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
கோடைகாலத்தில் குளிா்ச்சியாக சாப்பிடும்போது சில நேரங்களில் தொண்டை வலி ஏற்படலாம். அதை அலட்சியப்படுத்தினால் அது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் வகை பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுத்து ரூமாட்டிக் காய்ச்சல் ஏற்படலாம்.
Advertisement
மூட்டு - இணைப்புத் திசு, தோல் மற்றும் மூளையை இது பாதிக்கும். உரிய சிகிச்சை பெறாவிட்டால் இதய பாதிப்பும், சிறுநீரக பாதிப்பும் ஏற்படக்கூடும். எனவே, தொண்டையில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
மற்றொருபுறம் நோய்களை பரப்பும் கொசுக்கள் கோடையிலும் பெருக்கமடைகின்றன.
கோடையில் தண்ணீரை சேமித்து வைக்கும்போது முறையாக மூடி வைக்காமல் இருந்தால், நன்னீரில் வளரக்கூடிய, ‘ஏடிஸ்’ கொசுக்கள் உருவாகக்கூடும்.
எனவே குடிநீரை காய்ச்சி பிறகு குளிா்வித்து பருகலாம். இதன் மூலம், டெங்கு, டைபாய்டு, மூளைக் காய்ச்சல் மற்றும் எலிக் காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.