தூத்துக்குடியில் தந்தையை கொலை செய்த சிறுவன் கைது
தூத்துக்குடி செல்சீனி காலனியில் தந்தையை வெட்டிக்கொலை செய்ததாக 15 வயது சிறுவனை தென்பாகம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி அனுசியா. இவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சமையல் தொழிலாளியான இவர், தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்துவதுடன் குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். அதேப்போன்று ஞாயிற்றுக்கிழமை இரவும், மது போதையில் வீட்டிற்கு வந்த சக்தி, தனது மனைவி அனுசியாவை அடித்து துன்புறுத்தினாராம்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவரது 15 வயது மூத்த மகன், திங்கள்கிழமை அதிகாலையில், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தியை வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று கொலை செய்யப்பட்ட சக்தியின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட சக்தியின் மூத்த மகனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மது போதையில் தாயை துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்து சிறுவன் தந்தையை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.