தற்கொலை செய்துகொண்ட ரேஷ்மா
தற்கொலை செய்துகொண்ட ரேஷ்மா 
தமிழ்நாடு

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

DIN

சென்னை சென்ட்ரலில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் காணாமல் போன இளம்பெண், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர், நேற்று(ஏப். 23) காலை தூக்கிட்டு இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை யாரும் உரிமை கோராத நிலையில், அப்பெண்ணின் உடல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் மற்றும் ஆர்பிஎஃப் காவல்துறையினர் இணைந்து இறந்து போன பெண்ணின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

மேலும் சென்ட்ரல் ரயில் பயணிகள் தங்கும் அறையும் அங்கு இருக்கும் நிலையில், ஒரு ரயில்வே அதிகாரி கூடவா பாதுகாப்புப் பணியில் இல்லாமல் இருந்திருப்பார் என்பன போன்ற சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இறந்து போன பெண் வடநாட்டைச் சேர்ந்தவரா ? அல்லது தமிழகத்தைச் சேர்ந்தவரா ? மேலும் இப்பெண் வடநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவரா ? அல்லது சென்னையிலிருந்து வடநாட்டுக்கு செல்லவிருந்த பயணியா ? என்கிற சந்தேகம் போலீசார் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட பெண்ணைக் குறித்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்ற செய்தியும், தொலைக்காட்சிகளில் அவரது புகைப்படம் மற்றும் அவர் ரயில் நிலையத்தில் உலாவிய சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.

அதன் மூலமாக, சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் உடனடியாக சென்ட்ரல் ரயில்வே காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள பெண்ணைக் குறித்த விவரங்களை வழங்கியுள்ளனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண், கேரளத்தின் பாலக்காடு பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்பது தெரியவந்துள்ளது. அவரது கணவர் அனுஷ்க்கும், இவருக்குமிடையே அடிக்கடி சிறுசிறு தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, ரேஷ்மா கணவரை விட்டுத் தனியாகச் சென்று அவருடைய பெற்றோருடன் கோயம்புத்தூரில் தங்கி வந்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ரேஷ்மா செவிலியராக ஒரு வருடம் வேலை செய்துள்ளார். கடைசியாக காவேரி மருத்துவமனையில் கடந்த 3 மாதமாக வேலை செய்து வந்துள்ளார்.

இதனிடையே, இவரது தாயார் சியாமளா, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளார். தனது தாயார் இறந்த துக்கம் தாங்காமல் ரேஷ்மா பல நாட்களாக சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது தந்தை ரமேஷ், ரேஷ்மாவுக்கு துணையாக கடந்த இரண்டு மாதமாக ரேஷ்மாவுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று(ஏப். 23) மதியம் ரேஷ்மா யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து, ரேஷ்மாவின் தந்தை ரமேஷ், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு நேரில் சென்றும், போன் செய்தும் விசாரித்ததில் ரேஷ்மா குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, ரமேஷ், தனது மகளைக் காணவில்லை என்று சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, வீட்டை விட்டு வெளியேறி, ரேஷ்மா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஓய்வறையின் அருகே உள்ள இரும்பு ரேக்கில் தான் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரேஷ்மா குறித்த விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், கடைசியாக அவர் ரயில் நிலையத்தில் நடந்து சென்றது பதிவாகியுள்ளதை கண்டறிந்து உறுதிசெய்துள்ளனர்.

இதனையடுத்து, உயிரிழந்த ரேஷ்மாவின் உடல், உடல்கூராய்வுக்குப் பின் சென்னையிலிருந்து அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கும் தற்கொலை தீர்வாகாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT