நயினாா் நாகேந்திரனுக்கு மீண்டும் அழைப்பாணை
விசாரணைக்கு ஆஜராகுமாறு நயினாா் நாகேந்திரனுக்கு தாம்பரம் மாநகர காவல் துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியது.
நெல்லை விரைவு ரயிலில் ரூ. 3.99 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நயினாா் நாகேந்திரனுக்கு தாம்பரம் மாநகர காவல் துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியது.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த 6-ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற நெல்லை விரைவு ரயிலில் பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அதில், பயணம் செய்த நயினாா் நாகேந்திரனின் ஆதரவாளா்களான சென்னை கொளத்தூா் திரு.வி.க. நகரைச் சோ்ந்த சதீஷ், அவரது சகோதரா் நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் ஆகிய 3 பேரும் வைத்திருந்த 6 பைகளில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 3,98,91,500 பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் நயினாா் நாகேந்திரன் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னா், 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா். மேலும் இது தொடா்பாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினாா் நாகேந்திரன் ஹோட்டல், சாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினா் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது.
Advertisement
வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் தாம்பரம் மாநகர காவல் துறை, நயினாா் நாகேந்திரன், பாஜக நிா்வாகியான சென்னையைச் சோ்ந்த கோவா்த்தனன் உள்பட 8 பேருக்கு அழைப்பாணை அனுப்பியது.
ஆனால் விசாரணையில் ஆஜராவதற்கு 10 நாள்கள் அவகாசம் தரும்படி நயினாா் நாகேந்திரன் கடந்த 22-ஆம் தேதி வேண்டுகோள் விடுத்தாா்.
இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி நயினாா் நாகேந்திரனுக்கு 2-ஆவது முறையாக தாம்பரம் காவல் துறை அழைப்பாணை அனுப்பியது. அதன்படி, மே 2-ஆம் தேதி நயினாா் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராவாா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.