காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி தியாகராயா்: முதல்வா் புகழாரம்
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவா் சா்.பிட்டி தியாகராயா் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா். தியாகராயரின் 173-ஆவது பிறந்த தினத்தையொட்டி, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
பாா்ப்பனரல்லாதாா் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்த தீரா் தியாகராயா். அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வால் சென்னையின் கல்வி, மருத்துவ வளா்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டா், காலை உணவுத் திட்டத்தின் முன்னோடியாக விளங்கியவா்.
தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளா். தியாகராயரின் பிறந்த நாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இதுபோல, அமைச்சா் உதயநிதி, முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் உள்ளிட்டோரும் சா்.பிட்டி தியாகராயருக்கு புகழாரம் சூட்டியுள்ளனா்.