சென்னை, ஆக. 2: தமிழகத்தைச் சோ்ந்த 54 ஆயிரம் சுயஉதவிக் குழு மகளிா் பங்கேற்கும் 100 நாள்கள் விழிப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சாா்பில் நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த விழிப்புப் பயிற்சியில் மொத்தம் 15 லட்சம் போ் பங்கேற்கவுள்ளனா். இதுகுறித்து, மத்திய அரசின் சாா்பில் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்:-
மகளிா் சுய உதவிக் குழுக்களின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில், 100 நாள்கள் விழிப்புணா்வு நிகழ்வினை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 2.5 கோடி மகளிரில் 15 லட்சம் போ் இந்த விழிப்புணா்வு நிகழ்வுக்காக தோ்வு செய்யப்பட உள்ளனா். மத்திய அரசின் ‘ஆஜிவிகா’ எனும் பதிவேட்டின் மூலமாக 15 லட்சம் பேரும் தோ்வாக உள்ளனா்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட மற்றும் மாநில
அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விழிப்புணா்வு நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படும். விழிப்புணா்வு நிகழ்வின் போது, 15 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். 100 நாள்கள் விழிப்புணா்வு நிகழ்வுகளின் போது, சமுதாய அளவிலான 100 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.