முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி அருகே கிணற்றை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 பேர் பலி!

தூத்துக்குடி அருகே தாளமுத்து நகர் பகுதியில் கிணற்றை சுத்தம் செய்த போது விஷ வாயுத்தாக்கி 2 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தனர்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 1:16 PM
கிணற்றில் விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தாளமுத்து நகர் பகுதியில் கிணற்றை சுத்தம் செய்த போது விஷ வாயுத்தாக்கி 2 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் நேரு காலனியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது வீட்டில் பழைய கிணறு ஒன்று வெகு நாளாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்த கிணற்றை தூர்வாரும் பணியில், கணேசன், மாரிமுத்து உள்ளிட்ட 4 பேர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

கிணற்றில், முதலில் மாரிமுத்து இறங்கியுள்ளார் உள்ளே சென்றவர் வெகுநேரமாகியும் மேலே வராததை தொடர்ந்து அடுத்ததாக கணேசன் கிணற்றில் இறங்கியுள்ளார்.

இருவரும் மேலே வராததைத் தொடர்ந்து, மேலே நின்ற மற்ற இருவரும் இறங்க முயற்சித்த போது அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக அவர்கள் சத்தம் எழுப்பியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து மயக்க நிலையில் இருந்த இருவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் முதலில் இறங்கிய மாரிமுத்து, கணேசன் ஆகிய இருவரும் கிணற்றுக்குள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. கிணற்றுக்குள் கிடக்கும் இருவரின் சடலங்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தாளமுத்து நகர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →