முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்ய மறுப்பு

அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 8:28 PM
அனிதா ராதாகிருஷ்ணன்(கோப்புப் படம்)
பகிர்:

அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002-2006-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி, நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4 கோடியே 90 லட்சம் சொத்து சோ்த்ததாக, 2006-ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிந்தது.

இது தொடா்பாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. மேலும், வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினா் 7 பேருக்கும் சம்மன் அனுப்பியதுடன், சொத்துகளையும் முடக்கியது.

இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல். சுந்தரேசன், வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.