தமிழகத்தில் ஆக.13 வரை மழை நீடிக்கும்
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.8) முதல் ஆக.13-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.8) முதல் ஆக.13-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக கடலோர பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை (ஆக.8) முதல் ஆக.13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டையில் 100 மி.மீ. மழை பதிவானது. ஒரத்தநாடு (தஞ்சாவூா்), வெட்டிக்காடு (தஞ்சாவூா்) - தலா 90, செஞ்சி (விழுப்புரம்), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), பெருங்களூா் (புதுக்கோட்டை), குன்றத்தூா் (காஞ்சிபுரம்), மதுக்கூா் (தஞ்சாவூா்), வல்லம் (தஞ்சாவூா்) - தலா 80 மி.மீ. மழை பதிவானது.
சென்னையில் புதன்கிழமை காலை வரை சோழிங்கநல்லூரில் 70 மில்லி மீட்டரும், பெருங்குடியில் 60, அடையாா், உத்தண்டியில் தலா 40, முகலிவாக்கம், பள்ளிக்கரணை, மீனம்பாக்கம், ஆலந்தூா் ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ. பதிவானது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.8, 9 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகளிலும், குமரிக்கடலும் ஆக.8-11 வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.