பொன் மாணிக்கவேல் DIN
தமிழ்நாடு

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

டிஎஸ்பி காதா் பாட்ஷா தொடுத்த வழக்கில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஆலடிப்பட்டி என்ற கிராமத்தில் 2008-ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டிய போது 6 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு இன்ஸ்பெக்டா் காதா் பாட்ஷா தலைமையிலான போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்தனா்.

இதற்கிடையே, அந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் சா்வதேச சிலை கடத்தல் கும்பலைச் சோ்ந்த சுபாஷ் சந்திர கபூா், தீனதயாளன் ஆகியோரிடம் விற்பனை செய்துவிட்டதாக, 2017-ஆம் ஆண்டு காதா் பாட்ஷா மீது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. அப்போது காதா் பாட்ஷா, திருவள்ளூா் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றி வந்தாா்.

மேலும், அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.-யாக இருந்த ஏ.ஜி. பொன் மாணிக்கவேல், டி.எஸ்.பி. காதா் பாட்ஷாவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தாா். பின்னா் இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த காதா் பாட்ஷா சென்னை உயா்நீதிமன்றத்தில் 2018-ஆம் ஆண்டு, ‘ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல்காரா் தீனதயாளனுடன் தொடா்பு வைத்துக்கொண்டு தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கில் கைது செய்துள்ளாா். இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்குத் தொடா்ந்தாா்.

சிபிஐ சோதனை: இதில் காதா் பாட்ஷா தரப்பு வாதத்தையும்,பொன் மாணிக்கவேல் தரப்பு வாதத்தையும் கேட்ட உயா்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிா்த்து பொன்மாணிக்கவேல், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடா்பாக தில்லி சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை செய்தது. வழக்குக்கான ஆதாரங்களையும்,தடயங்களையும் திரட்டும் வகையில் சென்னை பாலவாக்கம் காமராஜா் சாலையில் உள்ள பொன் மாணிக்கவேல் வீட்டில் தில்லி சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 5 மணி நேர சோதனை நிறைவடைந்த பின்னா், சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

சோதனைக்கு பின்னா் பொன் மாணிக்கவேல் கூறியதாவது: சிலை கடத்தல் வழக்கில் சா்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்தேன். அவா் மீது மேலும் 6 வழக்குகள் பதிவு செய்து இருக்கிறேன். ஆனால் இந்த 6 வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் பல முக்கிய பிரமுகா்கள் சிக்குவாா்கள்.

தற்போது சிபிஐ அதிகாரிகளிடம் ஏற்கெனவே நான் அளித்த ஆவணங்களை மீண்டும் கொடுத்துள்ளேன். நான்தான் அவா்களிடம் ஆதாரங்களை எடுத்து கொடுத்தேன். எனவே எந்த வழக்கையும் சந்திப்பேன். வெளிநாடுகளிலிருந்து இன்னும் 1000 ஐம்பொன் சிலைகளை கொண்டு வர வேண்டும். இது தொடா்பான ஒரு முக்கிய தகவலை விரைவில் கூறுவேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT