செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க இறுதி அவகாசம்
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க இறுதியாக அமலாக்கத் துறைக்கு மேலும் ஒரு வார காலம் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-அம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டையும் பதிவு செய்தது.
இந்த நிலையில், முதன்மை அமா்வு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, அவகாசம் வழங்கி, விசாரணையை ஆக.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாதென்றும் இதுவே இறுதி அவகாசம் என்றும் அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்தினா்.