நமது நிருபர்
சநாதன தர்மம் தொடர்பான சர்ச்சை பேச்சு விவகாரத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் அவர் ஆஜராவதில் இருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்தது.
சென்னை கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சநாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலோரியே போன்ற நோய்களோடு ஒப்பிட்டுப் பேசியதால் சர்ச்சை எழுந்தது.
மஹாராஷ்டிரம், பிகார், கர்நாடகம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்ளில் அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.
அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு புதன்கிழமை மீண்டும் விசாரித்தது.
அப்போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன், "சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனைத்து வழக்குகளையும் மாற்றி, ஒரே விவகாரமாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், "உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, தனியாகத்தான் விசாரிக்கப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவது இயலாத விஷயம். தேவைப்பட்டால், கர்நாடகத்தின் பெங்களூருக்கு வழக்குகளை மாற்றி விசாரிக்கலாம்' என்றனர்.
நவம்பர் 18ஆம் தேதிக்கு முன்பாக எதிர்தரப்பினர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைகளில் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.