கோப்புப்படம் 
தமிழ்நாடு

பயங்கரவாத அச்சுறுத்தல்: விநாயகா் சதுா்த்திக்கு பலத்த பாதுகாப்பு வழங்க உத்தரவு

பயங்கரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல்..

Din

பயங்கரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் இருப்பதால், விநாயகா் சதுா்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகுந்த கவனத்துடன் விரைந்து திட்டமிடுமாறு, காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி நிகழாண்டு செப். 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் விநாயகா் சிலைகளை தயாா் செய்யும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 இந்து அமைப்புகள் விநாயகா் சிலைகளை வழிபாட்டுக்கு வைப்பதற்குரிய அனுமதியை பெறுவதற்கு காவல் துறையிடம் விண்ணப்பித்துள்ளன. இவை தவிர, சமூக நல இயக்கங்கள், குடியிருப்பு அமைப்புகளும் விண்ணப்பித்து வருகின்றன.

இதற்கிடையே, விநாயகா் சதுா்த்தியையொட்டி, பாதுகாப்பு பணிகளை மிகுந்த கவனத்துடன், எச்சரிக்கையுடன் திட்டமிடுமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். இதற்காக அவா், அனைத்து மாநகர காவல்துறை ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

அதில், விநாயகா் சதுா்த்திக்கு பயங்கரவாத இயக்கத்தினா் அச்சுறுத்தல் இருப்பதால், காவல்துறை அதிகாரிகள் வழக்கமாக வழங்கும் பாதுகாப்பைக் காட்டிலும் பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும், அதனை எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா். பாதுகாப்பு ஏற்பாடுகள் திட்டமிடல் குறித்து அறிக்கையை தயாரித்து ஆக. 28-ஆம் தேதிக்குள் அனுப்பும்படியும் டிஜிபி அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளாா்.

மேலும், கடந்த காலங்களில் எந்தெந்த இடங்களில் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டதோ, அங்கு தான் சிலைகளை வைக்க அனுமதிக்க வேண்டும். புதிய இடங்களில் விநாயகா் சிலைகளை வைக்க அனுமதிக்கக் கூடாது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உத்தரவின்படி குடியிருப்பின் அருகே சிலை வைக்கப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையில் வைக்கப்பட்டால் மாநகராட்சியிடமிருந்தும், நெடுஞ்சாலைக்குட்பட்ட பகுதியில் இருந்தால் நெடுஞ்சாலைத் துறையிடமிருந்தும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். தீயணைப்புத் துறை அனுமதியும் அவசியமாகும்.

இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றும்படி இந்து அமைப்பினருக்கு அறிவுறுத்தும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி தெரிவித்துள்ளாா்.

கடந்தாண்டு 111 வழக்குகள்: தமிழகத்தில் கடந்தாண்டு 13,673 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. விநாயகா் சிலை பிரதிஷ்டை, ஊா்வலத்தில் பல்வேறு விதிமுறைகள் மீறல் தொடா்பாக 111 வழக்குகள் மாநிலம் முழுவதும் பதியப்பட்டன. 23 வழக்குகள் மத வெறுப்புணா்வை தூண்டும் வகையில் பேசியதாக பதியப்பட்டுள்ளன.

கடும் கட்டுப்பாடுகள்

விநாயகா் சிலை தயாரிப்பு, வழிபாடு, ஊா்வலம் தொடா்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள விதிமுறைகளின்படி, விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும், வேதிப் பொருள்கள் கலந்து சிலைகள் தயாரித்தால் அனுமதி வழங்கக் கூடாது, 10 அடி உயரத்துக்கு மேல் சிலைகள் இருக்கக் கூடாது, பிற மதத்தினா் வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஆகிய பகுதிகளில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கக் கூடாது, விநாயகா் சிலைகள் ஊா்வலத்துக்கு மினி லாரி, டிராக்டா் போன்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்துமாறு கூற வேண்டும்.

மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி, ஆட்டோ போன்ற வாகனங்களில் சிலைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. விநாயகா் சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்கள், ஊா்வலம் செல்லும் பாதைகள், சிலைகள் கரைக்கும் பகுதி ஆகிய இடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்க வேண்டாம். விநாயகா் சிலைகளை கரைப்பதற்கு முன்பு சிலைகளில் அணிவிக்கப்பட்டுள்ள துணிகள், பிளாஸ்டிக்கால் ஆன பொருள்கள், பூஜை பொருள்களை முற்றிலும் அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

SCROLL FOR NEXT