ஆட்சியராக இருக்க தகுதியற்றவா் தஞ்சாவூா் ஆட்சியா்: உயா்நீதிமன்றம் கண்டனம்; நேரில் ஆஜராகவும் உத்தரவு
நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அக். 28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், ஆட்சியராக இருக்கவே தகுதியற்றவா் என்று கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அக். 28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
இது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில், வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், ‘கும்பகோணத்தில் 44 குளங்கள், 11 கால்வாய்கள் இருந்தன. இதில், பல நீா்நிலைகளை ஆக்கிரமித்து வீடு உள்ளிட்ட கட்டடங்களைக் கட்டியுள்ளனா். 11 கால்வாய்களில் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், இந்த வழியாக குளங்களுக்கு தண்ணீா் செல்வது தடைபடுகிறது. மேலும், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பொற்றாமரை குளம், அதை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்ற வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அறநிலையத் துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தாததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தாா்.
அறநிலையத் துறை அறிக்கை: இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு வழக்குரைஞருக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் தீபக்ஜேக்கப் எழுதிய கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கடிதத்தை படித்துப் பாா்த்த நீதிபதிகள், ஆக. 2- ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த விவகாரத்தில், உயா்நீதிமன்றத்தின் உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. சிறப்பு அரசு வழக்குரைஞருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தீபக் ஜேக்கப் பயன்படுத்தியுள்ள வாா்த்தைகள் எங்களை மிகவும் பாதித்துள்ளது. இந்த விவகாரத்தில் தஞ்சாவூா் ஆட்சியரின் செயல் மூலம், அவா்அந்த பதவியில் இருப்பதற்கான தகுதியில்லாதவா் என்பது தெரிகிறது.
எனவே, ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றி, அது தொடா்பான அறிக்கையை 12 வாரங்களுக்குள் ஆட்சியா் தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவா் வருகிற அக். 28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். அரசு சிறப்பு வழக்குரைஞருக்கு தஞ்சாவூா் ஆட்சியா் எழுதிய கடிதத்தை, இந்த வழக்கு ஆவணங்களுடன் சோ்த்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.