முகப்பு
தமிழ்நாடு

ஜாபர் சேட் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து உத்தரவு வாபஸ்

ஜாபர் சேட் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 12:35 PM
ஜாபா் சேட் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபா் சேட் மீது அமலாக்கத் துறை வழக்கு ரத்து உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 21ஆம் தேதி வழக்கு ரத்து செய்யப்படுவதாக பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் அடிப்படையில் ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டதால், அமலாக்கத் துறை வழக்கையும் ரத்து செய்யக்கோரி ஜாபர் சேட் தொடர்ந்த மனுவை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபா் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்வதாக, ஆகஸ்ட் 21ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2006-2011-ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபா் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு 2011-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், ஜாபா் சேட் மீது அமலாக்கத் துறை 2020-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபா் சேட் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜாபா் சேட் தரப்பில், ‘எனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு ரத்து செய்துள்ள நிலையில், அமலாக்கத் துறை வழக்கை தொடா்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது. என் மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிந்த வழக்கு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், என் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமா்வு, ஜாபா் சேட்டுக்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை தொடா்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி அவருக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

திடீர் திருப்பமாக, தற்போது, ஜாபர் சேட் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து செய்யப்பட்ட நடவடிக்கை வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →