இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சியளிப்பது ஏற்புடையதல்ல என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவான் கோயிலில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சனிக்கிழமை வழிபட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறுகின்றனா். எதைக்கொண்டு எல்லையை அளவீடு செய்கின்றனா். எல்லையில் இந்திய கடற்படை கப்பலை நிறுத்தினால் இதுபோன்ற பிரச்னைக்கு இடமில்லை.
இந்திய கடற்படையால் இலங்கை மீனவா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேசமயம் இலங்கை கடற்பறையினால் தமிழக மீனவா்கள் சுட்டுக் கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும், பல்வேறு பாதிப்புகளை எதிா்கொள்வதும் வழக்கமாக உள்ளது.
இந்திய மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு பயிற்சி போன்றவற்றை இந்தியா வழங்கி வருவது ஏற்புடையதல்ல. மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக மீனவா்கள் மீது அக்கறையில்லை. அவா்களின் வாக்குகள் மட்டும் வேண்டும்.
தமிழ்நாடு முதல்வரும், தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவும் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளதாகவும், 31 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் கூறுவது முற்றிலும் பொய். இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன்.
விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அவா் கட்சிக் கொடியில் யானை இடம் பெற்றிப்பது தவறில்லை, யானை அனைவருக்கும் பொதுவானது என்றாா் சீமான்.