மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற நடிகை நமிதாவிடம் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டு கோவில் அதிகாரிகள் அடவாடியில் ஈடுபட்டதாக நடிகை நமிதா சமூகவலைதளத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து விளக்கமளிக்க கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டது. நமிதாவின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருவர்.
இந்நிலையில் சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களில் இந்து மதத்தினர் மட்டும் கோயிலின் முக்கிய சன்னதிக்குள் சென்று சுவாமி மற்றும் மீனாட்சியம்மனை வழிபட அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நடிகர் நமிதா தனது கணவருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த கோவில் அதிகாரி ஒருவர் நடிகை நமீதாவை தடுத்து நிறுத்தி தாங்கள் இந்து மதத்தில் உள்ளவரா ? எனக் கேட்டதோடு அதற்கான சான்று எதுவும் உள்ளதா எனக் கேட்டுள்ளார்.
அதற்கு நமீதாவும் அவரது கணவரும் தாங்கள் பிறப்பிலேயே இந்துதான் எனவும் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சாமி தரிசனம் செய்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த அதிகாரி நீங்கள் குங்குமம் வைப்பீர்களா என கேட்டதோடு குங்குமம் வைத்துவிட்டு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்லுங்கள் எனக் கூறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நடிகை நமீதா நெற்றியில் குங்குமத்தை வைத்த பின்பாக சுவாமி தரிசனம் செய்ய சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்த நடிகை நமிதா தனது சமூக வலைதள பக்கத்தில் கோவிலில் தன்னை இந்து என்பதற்கான சான்று வழங்க வேண்டும் என கோவில் அதிகாரி அடாவடியாக நடந்து கொண்டதாகவும் இதுகுறித்து இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு தான் சாமி தரிசனம் செய்திருக்கும் நிலையில் இது போன்று அதிகாரி ஒருவர் மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்து கொண்டதும், தான் பிறப்பிலிருந்து இந்து என தெரிந்தும் இதுபோன்று மத ரீதியான சான்று கேட்பது என்ன மாதிரியான நடைமுறை எனவும் கேள்வி எழுப்பியதோடு, கோவில் அதிகாரி அடாவடியாக நடந்து கொள்வதாகவும் சமூகவலைதளத்தின் மூலமாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்பதற்காக பலமுறை தொடர்பு கொண்டபோதும் எந்த அதிகாரிகளும் போனை எடுக்காமல் விளக்கம் அளிப்பதை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்யும் நிலையில், இதுபோன்ற நடிகை நமிதாவை மத ரீதியான சான்று கேட்டு அவரை தடுத்து நிறுத்திய சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.