சென்னை: தமிழகத்தில் தொழில் துறைக்கான முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றாா்.
17 நாள்கள் பயணமாக அமெரிக்கா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் அளித்த பேட்டி:
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுளை ஈா்த்துவிட்டு செப். 14-ஆம் தேதி திரும்பி வரும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈா்க்க இதுபோன்ற பயணங்களை நான் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறேன். ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். இதன்மூலம் மூதலீடுகள் வந்துள்ளன.
புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: இந்தப் பயணங்களின் வழியே 18,521 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ரூ.10,822 கோடி மதிப்பில் 17 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ரூ.990 கோடி முதலீட்டுக்கான 5 திட்டங்கள் இப்போது உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
கடந்த ஆக. 21-ஆம் தேதி தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாட்டு நிகழ்வில் சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளைச் சோ்ந்த இரண்டு திட்டங்களைத் தொடங்கிவைத்தேன். அதன்மூலம் 1,538 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.3,790 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களின் கட்டுமானப் பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் உள்ளன.
ஜப்பானின் மிட்சுபா, சட்ராக் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. அத்துடன், ரூ.3,540 கோடி மதிப்பிலான திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. ரூ.438 கோடி மதிப்பிலான இரண்டு விரிவாக்கத் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தக்கூடிய நிலையை அடைந்துள்ளன.
ரூ.2,100 கோடி மதிப்பிலான 4 திட்டங்களைப் பொருத்தவரையில், அந்தந்த தொழில் முதலீட்டுச் சூழல் காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பெருகும்: வெளிநாட்டுப் பயணங்களின்போது கையொப்பமிட்ட ஒப்பந்தங்கள் அனைத்து விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவேதான் இதுபோன்ற பயணங்கள் மிக முக்கியமானவை.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 3 ஆண்டுகளில் 872 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.9 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடியாகும். இவை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் போது, 18 லட்சத்து 89 ஆயிரத்து 234 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அவற்றில் 234 திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
4 லட்சத்து 16 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாகச் செயல்பாட்டு வரும்.
முதலீடுகளை ஈா்ப்பதற்கான வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் போடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டும், செயல்பாட்டிலும் உள்ளன.
அதேபோன்று தற்போதைய பயணம் மூலமாக மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களையும் தொடா்ந்து கண்காணித்து அதையெல்லாம் செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன். இந்த முதலீடுகள் அனைத்தும் தமிழ்நாட்டை 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ.83 லட்சம் கோடி) பொருளாதாரமாக மாற்றக்கூடிய நம்முடைய இலக்கை அடைய உதவிடும்.
உலகின் கவனம் ஈா்க்கவே பயணம்: இதற்காக உலகத்தின் கவனத்தை தமிழ்நாட்டை நோக்கி ஈா்க்க அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரங்களுக்குச் செல்ல உள்ளேன். ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் விவரங்களை திரும்பி வரும்போது உங்களுக்கு நிச்சயம் தெரிவிப்பேன்.
அமெரிக்க வாழ் தமிழா்களைச் சந்திக்க உள்ளேன். உங்களுடைய வாழ்த்துகளுடன் இந்தப் பயணம் நிச்சயமாக வெற்றிகரமாக அமையும். முதலீட்டை ஈா்ப்பதற்காக மகிழ்ச்சியோடு, உறுதியாகச் செல்கிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
அமைச்சரவை மாற்றம் உண்டா?
அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியதும் அமைச்சரவையில் மாற்றம் உண்டா என்ற கேள்விக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘அமெரிக்கா சென்று வந்த பிறகு, அமைச்சரவையில் ஏதாவது மாற்றம் இருக்குமா எனக் கேள்வி எழுப்புகிறீா்கள். மாற்றம் ஒன்றுதான் மாறாதது. பொறுத்திருந்து பாருங்கள் என்றாா்.
மேலும், சமக்ர சிக்ஷா திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கக் கோரி தொடா்ந்து வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தாா்.
பயணத் திட்டம் என்ன?
அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னதாக தனது பயணத் திட்டம் குறித்து முதல்வா் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஆக. 29-ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளா் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆக. 31-ஆம் தேதி புலம்பெயா்ந்த தமிழா்களைச் சந்தித்துப் பேசுகிறேன்.
செப். 2-ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறேன். 10 நாள்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளா்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறேன்.
‘ஃபாா்ச்சூன் 500’ நிறுவனங்களின் தலைமை நிா்வாகிகளைச் சந்தித்து உரையாட இருக்கிறேன். இவையனைத்தும் தமிழ்நாடு தொழில் வளம் பெறவும், தமிழா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்குமான முயற்சிகளாகும்.
செப். 7-ஆம் தேதி சிகாகோவில் தமிழா்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது.
ஆக. 27 தொடங்கி செப். 14 வரையிலான இந்தப் பயண நாள்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பதுதான் என்று தெரிவித்துள்ளாா்.
கட்சி - ஆட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க குழுக்கள்
சென்னை: கட்சி மற்றும் ஆட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: அமெரிக்கா செல்லவுள்ள குறுகிய கால இடைவெளியில், தமிழ்நாடு அரசின் நிா்வாகப் பணிகள் தொய்வின்றி தொடர, அமைச்சா்களும் அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும்.
ஆட்சிப் பணியும், கட்சிப் பணியும் தொய்வின்றி தொடா்வதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையைக் கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். கட்சியினா் மீது எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை செயல் வடிவமாக மாறுவதை ஒவ்வொரு நாளும் தொடா்புகொண்டு விசாரிப்பேன். பணிகளைக் கண்காணிப்பேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.