நிதி நிறுத்திவைப்பு: பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்க மு.க. ஸ்டாலின் கோரிக்கை.
தமிழ்நாட்டிற்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில், சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
சமக்ரா சிக்ஷா என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் இது. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் போன்றவற்றிற்கு திட்ட ஒப்புதல் வாரியத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு நிதி விடுவிக்கப்படுகிறது.
அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிற்கு 3,586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் பங்கு 2,152 கோடி ரூபாய். சுமார் ரூ. 60 கோடி.
அரசின் அந்த பங்களிப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் 2024-லேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான 573 கோடி ரூபாயினை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, முந்தைய ஆண்டுக்கான 249 கோடி ரூபாயையும் ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
இதற்கு முன்பும், தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய கல்வி அமைச்சர்தான் கடிதம் எழுதிய பின்னரே நிலுவையில் உள்ள நிதியில் ஒரு பகுதி கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்டது.
எனவே, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவித்திட பிரதமர் நரேந்திர மோடி இதில் நேரடியாக தலையிட வேண்டும் என முதல்வர் கோரியுள்ளார்.