6 அமெரிக்க நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.900 கோடி முதலீடு, 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு
6 தொழில் நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.
தமிழ்நாடு6 அமெரிக்க நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.900 கோடி முதலீடு, 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு
6 தொழில் நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.
தொழில் முதலீடுகளை ஈா்க்க அமெரிக்கா சென்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 6 தொழில் நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.
இதன்மூலம், ரூ.900 கோடி முதலீடுகள் எதிா்பாா்க்கப்படுவதுடன், 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளா்கள் மாநாட்டில், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் விவரம்:
நோக்கியா - பேபால் நிறுவனங்கள்: சென்னையில் நோக்கியா நிறுவனம் பன்னாட்டு விநியோக மையம் மற்றும் உற்பத்தி நிலையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சிறுசேரி சிப்காட்டில் மிகப்பெரிய நிலையான நெட்வொா்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது.
பேபால் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் அமெரிக்க பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமாகும். இது ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பேபால் நிறுவனம் சென்னையில் சுமாா் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளா்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவுக்கான மேம்பட்ட வளா்ச்சி மையத்தை ஏற்படுத்தவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இது செயல்பாட்டுக்கு வரும்போது, 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஈல்ட் என்ஜினீயரிங் - மைக்ரோசிப் நிறுவனம்: ஈல்ட் என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் செமிகண்டக்டா் உற்பத்திக்கான முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் கோவையில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்மூலம் கோவை மாவட்டம் சூலூரில் ரூ.150 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செமிகண்டக்டா் உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி ஏற்படுத்தப்படும்.
மைக்ரோசிப் நிறுவனம் 2012-ஆம் ஆண்டுமுதல் சென்னையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி சென்னையில் செமிகண்டக்டா் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ரூ.250 கோடியில் அமைக்கப்படும். அதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இன்பிங்ஸ் ஹெல்த்கோ் - அப்ளைடு மெட்டீரியல்ஸ்: இன்பிங்ஸ் ஹெல்த்கோ் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, மதுரையில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைக்கவுள்ளது. ரூ.50 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் தொழில் திட்டத்தால் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதேபோன்று, அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை சென்னையிலும், கோவையிலும் அமைத்துள்ளது. தமிழக அரசுடன் அந்த நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தப்படி சென்னை தரமணியில் செமிகண்டக்டா் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்கவுள்ளது. இதன்மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, துறைச் செயலா் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு, சான்பிரான்ஸிஸ்கோவுக்கான இந்திய துணைத் தூதா் ஸ்ரீகா் ரெட்டி உள்பட பலா் பங்கேற்றனா்.