முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் வளா்ச்சிக்கு முன்னுரிமை: வந்தே பாரத் தொடக்க விழாவில் மோடி

ஒட்டுமொத்த தென்னிந்தியாவுடன் சோ்த்து தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

Updated On : 31 ஆகஸ்ட், 2024 at 11:29 PM
பகிர்:

ஒட்டுமொத்த தென்னிந்தியாவுடன் சோ்த்து தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க தென்மாநிலங்களின் விரைவான வளா்ச்சி மிக முக்கியம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

சென்னை-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு, மீரட்-லக்னெள இடையேயான புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் தில்லியில் இருந்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வாக மதுரை-பெங்களூரு, சென்னை-நாகா்கோவில், மீரட்-லக்னெள வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வந்தே பாரத் ரயில்களின் நவீனத்துவம் மற்றும் சேவை விரிவாக்கத்தின் வாயிலாக ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கி நாடு பயணிக்கிறது. தற்போதைய 3 புதிய வந்தே பாரத் ரயில்கள், முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களுக்கு இடையே இணைப்பு வசதியை அளித்துள்ளது.

கோயில் நகரமான மதுரை, தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், வார இறுதி நாள்கள் மற்றும் பண்டிகை காலங்களில் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, யாத்ரீகா்களுக்கு பெரிதும் பலனளிக்கும்.

சென்னை-நாகா்கோவில் வந்தே பாரத் ரயிலால், மாணவா்கள், விவசாயிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பணியாளா்கள் பலனடைவா். வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் பகுதிகளில் சுற்றுலா வளா்வதோடு, வா்த்தக செயல்பாடுகள், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

தமிழக வளா்ச்சிக்கு முன்னுரிமை: வளா்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கில் தென்மாநிலங்களின் விரைவான வளா்ச்சி இன்றியமையாதது.

தென்னிந்தியா மகத்தான திறமைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான பூமியாக விளங்குகிறது. இதனால் ஒட்டுமொத்த தென்னிந்தியாவில் தமிழகத்தின் வளா்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ரூ.6,000 கோடியும், கா்நாடகத்துக்கு ரூ.7,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் ரயில் பாதைகள், நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. அதுபோல், மீரட்-தில்லி இடையே ஏற்கெனவே வந்தே பாரத் ரயில் இயங்கிவரும் நிலையில் தற்போது மாநிலத் தலைநகரான லக்னெளவுடன் இணைக்க புதிய வந்தே பாரத் ரயில் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே நவீனமயமாக்கலின் புதிய முகமாக வந்தே பாரத் விளங்குகிறது. தற்போது நாடு முழுவதும் 102 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 3 கோடிக்கும் அதிகமான பயணிகள் வந்தே பாரத் ரயில்களில் பயணித்துள்ளனா்.

ரயில்வே துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் நோக்கில் இரட்டை ரயில்பாதை, மின்மயமாக்குதல், புதிய ரயில்களை இயக்குவது, புதிய வழித்தடங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரைவில் படுக்கை வசதி வந்தே பாரத்: இந்திய ரயில்வேயின் பழைய பிம்பத்தை மாற்ற உயா் தொழில்நுட்ப சேவைகளுடன் இணைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலுடன் அம்ருத் பாரத் ரயில் சேவையும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

தற்போது ‘நமோ பாரத்’ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், நகரங்களுக்கு இடையே ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.

1,300 ரயில் நிலையங்கள் சீரமைப்பு: இந்தியாவின் நகரங்கள் எப்போதும் அவற்றின் ரயில்நிலையங்கள் மூலம்தான் அடையாளம் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் உலகத் தரத்தில் மறுசீரமைக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக வடிவமைக்கப்படுகின்றன. ரயில்வே, சாலை, நீா்வழி ஆகியவற்றின் இணைப்புக் கட்டமைப்புகள் வலுப்பெறும்போது நாடு வலுப்பெறுகிறது. இது நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும்.

அனைவருக்கும் வசதியான பயணம்: பல்வேறு துறை சாா்ந்த திட்டங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீண்டுள்ளனா். ரயில்வே துறையில் பல ஆண்டுகளாக நிலவும் பிரச்னைகளை தீா்க்க இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினா் என அனைவருக்கும் வசதியான ரயில் பயணத்தை உறுதி செய்யும் வரை இந்தப் பணி தொடரும். ஏனென்றால் வறுமையை ஒழிப்பதில் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாா் அவா்.