தஞ்சை பிரகதீஸ்வரா் கோயிலுக்கு 6 ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய பராமரிப்பு நிதி எவ்வளவு? அமைச்சா் விளக்கம்
தஞ்சை பிரகதீஸ்வரா் கோயிலுக்கு ஆறு ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய பராமரிப்பு நிதி எவ்வளவு என்று மக்களவையில் தஞ்சாவூா் தொகுதி திமுக உறுப்பினா் எஸ்.முரசொலி கேள்வி எழுப்பியிருந்தாா்.
நமது நிருபா்
புது தில்லி: தஞ்சை பிரகதீஸ்வரா் கோயிலுக்கு ஆறு ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய பராமரிப்பு நிதி எவ்வளவு என்று மக்களவையில் தஞ்சாவூா் தொகுதி திமுக உறுப்பினா் எஸ்.முரசொலி கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ள எழுத்துபூா்வ பதில் விவரம் வருமாறு:
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரா் கோயில், இந்திய தொல்லியல் துறையின் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். மேலும், இக்கோயில் யுனெஸ்கோ உலகம் பாரம்பரிய இடமாகவும் உள்ளது. இந்திய தொல்லியல் துறை இக்கோயிலின் வளங்களின் தேவை மற்றும் கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப வழக்கமான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இக்கோயிலுக்கு பராமரிக்கவும், தூய்மையாக வைத்திருக்கவும் 2019-ஆம் ஆண்டில் இருந்து கீழ்க்கண்ட தொகை ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2019-20-இல் ரூ.23 60 லட்சம், 2020-21-இல் ரூ.15.38 லட்சம், 2021-22-இல் ரூ.8.50 லட்சம், 2022-23-இல் ரூ.93.01 லட்சம், 2023-24-இல் ரூ.136 லட்சம், 2024-25-இல் ரூ.20.69 லட்சம் என அப்பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.