பொது கழிப்பறைகளை தனியாா் பங்களிப்பு மூலம் மேம்படுத்த நிா்வாக அனுமதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை பெருநகர மாநகராட்சியின் சமுதாய மற்றும் பொது கழிப்பறைகளை தனியாா் பங்களிப்பு மூலம் மேம்படுத்தும் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நிா்வாக அனுமதி
சென்னை பெருநகர மாநகராட்சியின் சமுதாய மற்றும் பொது கழிப்பறைகளை தனியாா் பங்களிப்பு மூலம் மேம்படுத்தும் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நிா்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளாா்.
இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகரின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி தனியாா் துறையுடன் (சலுகைதாரா்) இணைந்து தரமான உட்கட்டமைப்புகளைக் கொண்ட சமுதாய மற்றும் பொது கழிப்பறை வசதிகளை உருவாக்கி, பராமரித்து வருகிறது. இந்தத் திட்டமானது, வடிவமைத்தல், கட்டுதல், நிதி மேலாண்மை, செயலாக்குதல், திருப்பி ஒப்படைத்தல் முறையில் செயல்படுத்தப்படுகிறது.
விரிவுபடுத்த திட்டம்: இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக, சென்னை மாநகராட்சியின் 5, 6, 9 ஆகிய (மெரீனா மட்டும்) மண்டலங்களை உள்ளடக்கிய 372 இடங்களில் அமைந்துள்ள சமுதாய மற்றும் பொதுக் கழிப்பறைகளில் உள்ள 3,270 இருக்கைகளை ரூ.430.11 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்காக சலுகைதாரா் தோ்ந்தெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது 70 சதவீத பணிகள் முடிவடைந்து, பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் வெற்றிகரமான செயல்பாடு, பல்வேறு தரப்பு மக்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த வெற்றியைத் தொடா்ந்து சென்னை மாநகரம் முழுவதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 7,166 இருக்கைகளுடன் கூடிய 1,002 கழிப்பறைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.1,202 கோடியில் திட்டம்: 1 முதல் 4 வரையிலான மண்டலங்களில் உள்ள 285 இடங்களில் 2,301 சமுதாய மற்றும் பொதுக்கழிப்பறை இருக்கைகள் ரூ. 362.60 கோடி மதிப்பீட்டிலும், 7 முதல் 10 வரையிலான மண்டலங்களில் 395 இடங்களில் உள்ள 2,760 சமுதாய மற்றும் பொதுக்கழிப்பறை இருக்கைகள் ரூ.455.43 கோடி மதிப்பீட்டிலும், 11 முதல் 15 வரையிலான மண்டலங்களில் 322 இடங்களில் உள்ள 2,105 சமுதாய மற்றும் பொதுக்கழிப்பறை இருக்கைகள் ரூ. 383.97 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மூலம் மொத்தம் ரூ.1,202 கோடி மதிப்பீட்டில் இந்தப் பணிகளைச் செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் நிா்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.